அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவோம், பெண்களையும் அர்ச்சகராக்குவோம்; அதுவும் இன்னும் 100 நாட்களிலேயே செய்வோம்” என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாவு தெரிவித்துள்ளார். இதை ஆமோதித்தும், எதிர்த்தும் குரல்கள் ஒலிக்கின்றன. இது குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 45,000 கோயில்களில் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்கிறார்கள். ஹிந்து தர்மத்தைப் பொறுத்தவரை யாரும் எந்நிலைக்கு உயரலாம். ராமாயணம் தந்த வால்மீகியும், மகாபாரதத்தையும் வேதங்களையும் அளித்த வியாசரும் பிறப்பால் பிராமணர்கள் அல்ல. வியாசரை நாம் வேதவியாசர் என்றுதான் குறிப்பிடுகிறோம். ஹிந்து தர்மத்தின் மேன்மைகளை உலகமே அறிய செய்த சுவாமி விவேகானந்தர் பிறப்பால் பிராமணர் இல்லை. மேல் மருவத்தூர் உள்ளிட்ட பல கோவில்களில் பெண்கள் ஏற்கனவே பூஜைகள் செய்து வருகிறார்கள்.
மதச்சார்பின்மை என்றால் அரசியலில் மதம் தலையிடாது, மதம் அரசியலில் தலையிடாது என்பதே பொருள். பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வரைமுறைகளைக் கருத்தில் கொண்டே, இந்த விஷயத்தை அணுக வேண்டும். பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். அற்ப அரசியல் லாபத்திற்காகவும், சுயநல நோக்கத்திற்காகவும் இது திணிக்கப்படுமேயானால் இது தவறு. எந்த ஒரு விஷயமும் சமுதாயத்திடம் இருந்து தான் வர வேண்டும்.
ஹிந்து சமுதாயத்தில் ஆண் – பெண் பேதம் என்பது இல்லை. கணவன், மனைவி இருவரின் பங்கேற்பு இல்லாமல், எந்த பூஜையும் முழுமை பெறுவது இல்லை. ஜாதி பேதம் தர்ம சாஸ்திரத்தில் இல்லை. இருப்பினும் சில கோயில்களுக்கே, என்று தனிப்பட்ட சம்பிரதாயங்கள் உள்ளன. ஒரு சமுதாயமானது உரிமை, பாரம்பரியம், நம்பிக்கை ஆகியவற்றை ஒட்டியே வாழ்கிறது. குறிப்பிடப்பட்ட கோயில்களில் உள்ள சம்பிரதாயங்கள் மதிக்கப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வுகளைத் தான் நாம் யோசிக்க வேண்டும்.
இது பற்றி பக்தர்களும், ஆன்மிக பெரியவர்களும் தான் முடிவெடுக்க வேண்டும். அரசுத் துறைகளோ, அரசியல் கட்சிகளோ முடிவு செய்யக்கூடாது. இதை வைத்து ஹிந்து சமுதாயத்திற்குள் பிளவு ஏற்படுத்த யாரேனும் நினைத்தால், அது முறியடிக்கப்பட வேண்டும்.
இது அரசின் வேலையல்ல!
ரேணுகா