ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் முயற்சியால் தேசத்தின் தென்கோடியில் திருவள்ளுவர் சிலை!

கன்னியாகுமரில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூலகாரணம் யார் தெரியுமா? திகவும் இல்லை; திமுகவும் இல்லை. கன்னியா குமரியில் திருவள்ளு வருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? கருணாநிதிக்கோ, வீரமணிக்கோ…. இல்லை.

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான ஏக்நாத் ரானடே என்கிற மகத்தான கர்மயோகிக்குதான். கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் அன்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் ஏக்நாத் ரானடே தலைமையில் இயங்கிய விவேகானந்தா நினைவு மண்டப கமிட்டியிடம், ஒப்படைத்திருந்தது தமிழக அரசு. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின் பக்கத்தில் இருந்த மற்றொரு பாறையை ஜூலை ௧௭, ௧௯௭௭ல் தமிழக அரசாங்கத்திடமே ஒப்படைத்தது விவேகானந்தா கேந்திரம்.

ஒப்படைத்தது மட்டுமல்லாமல், மார்ச் ௧௫, 1979ல் தமிழக அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கப்பட்ட அந்த பாறையில் சுவாமி திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் திருவள்ளுவருக்கு சிலை எழுப்பவேண்டும் என்கிற திட்டத்தை அனுப்பியது விவேகானந்தா கேந்திரம். அனுப்ப ஏற்பாடு செய்தவர் ஏக்நாத் ரானடே.

அதன் காரணமாக தமிழக அரசாங்கமும் அதை ஏற்றுக் கொண்டு திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயும் ஏப்ரல் ௧௫, -1979ல்  கன்னியாகுமரில்  நாட்டினார்கள். ஆக, கன்னியாகுமரில் திருவள்ளுவருக்கு இன்று கம்பீரமாக சிலை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழு முதல் காரணம் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் ஏக்நாத் ரானடேதான். ஹிந்து அமைப்புதான் காரணம். சில ஆண்டுகளுக்கு முன் ‘விஜயபாரதம்’ ஒரு அட்டைப்படக் கட்டுரை எழுதி இந்த விஷயத்துக்கான ஆவணங்களையும் வெளியிட்டிருந்தது.