தவறான விளம்பரங்கள் அல்லது பிரச்சாரங்களை வெளியிட்டிருந்தால் உச்ச நீதிமன்றம் எங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கலாம் அல்லது மரண தண்டனை விதிக்கலாம் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்வதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாங்கள் யோகா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, பஞ்சகர்மா, ஷாத்கர்மா, விரதம் போன்றவை மூலமும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் மூலமும் மக்களுக்குச் சிகிச்சை அளித்து ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, ஆஸ்துமா, ஆர்தரைடிஸ், உடல் பருமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து அவர்களை விடுவித்துள்ளோம். ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சிகிச்சை அளித்த உண்மையான சான்று எங்களிடம் உள்ளது. நாங்கள் போலியான பிரச்சாரம் செய்யவில்லை என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.
பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளையால் ஏற்படுத்தப்பட்டுள்ள உலகின் சிறந்த ஆயுர்வேத ஆய்வு மையங்கள் மூலம் பாரம்பரிய சிகிச்சை முறைகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எங்களின் உலகப் புகழ் பெற்ற நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நெறிமுறைகளை கடைபிடித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வு விவரங்கள் சுமார் 500 ஆய்வுக் கட்டுரைகளாக உலகளவில் தலைசிறந்த பல்வேறு ஆய்வு இதழ்களில் வெளியாகியுள்ளன. ஆனால் யோகா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி மீது வெறுப்பு கொண்ட சில டாக்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில நவீனகால மருத்துவர்கள் பொய்யான பேஸ்மேக்கர் கருவி பொருத்துவது, சிறுநீரக திருட்டு, தேவையற்ற மருந்துகள், பரிசோதனைகளைப் பரிந்துரைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்தகையவர்களுக்கு எதிராகப் போராடும் அதேவேளையில் சில சிறந்த மருத்துவர்களை நாங்கள் மதிக்கிறோம். மேலும் அலோபதியில் இருந்து மகரிஷி சரக், மகரிஷி சுஷ்ருதர், மகரிஷி தன்வந்திரி, பதஞ்சலி ஆகியோரிடமிருந்து பெற்ற மேம்பட்ட சிகிச்சையை நாங்கள் விஞ்ஞான ரீதியாகவும் நம்பகத்தன்மையுடனும் முன்னோக்கி எடுத்து செல்கிறோம். இதை வணிக நோக்கத்துக்காகச் செய்யாமல் மக்களுக்குப் பயன்படும் எண்ணத்தில் செய்கிறோம். தேவையேற்பட்டால் நீதிமன்றத்திலும், செய்தியாளர்களிடமும் உண்மை மற்றும் சான்றுகளை வெளியிடத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.