ஆப்ரேஷன் சிந்தூர் முதல் நவீன ட்ரோன் பயன்பாடு வரை

பாரதம் ராணுவ ரீதியாக பல்வேறு மாறுதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. முன்பெல்லாம் காலாட்படைதான் போர்க்களத்தில் முக்கியப் பங்கு வகிப்பது வழக்கம். இப்போது இது முற்றிலுமாக மாறி விட்டது. 2025ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதியும், 8ம் தேதியும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏற்படுத்திய ரத்தக்களரிக்கு சரியான பதிலடியாகும். ஆப்ரேஷன் சிந்தூரைக் கண்டு, பாகிஸ்தான் ஸ்தம்பித்து விட்டது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்யக்கூடிய நாடுகளும் நிலைகுலைந்து விட்டன. மேற்கு எல்லையில் தொடர்ந்து 4 நாட்கள் நமது ட்ரோன்கள் பாகிஸ்தான் அஸ்திரங்களையும், ராணுவ தளங்களையும் சரமாரியாகத் தாக்கின. லே முதல் சர் கிரீக் வரை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு முற்றிலுமாக நிர்மூலம் செய்யப்பட்டது. இந்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ட்ரோன்களின் பங்கை பாராட்ட வேண்டியது அவசியம். பாகிஸ்தானுக்கு சீனா ராணுவ தளவாடங்களை அளித்திருந்தது. அவற்றையெல்லாம் நமது ட்ரோன்கள் தவிடு பொடியாக்கி விட்டன. ஒரு குறிப்பிட்ட இடத்தில், 23 நிமிடத்துக்குள் எல்லா நடவடிக்கைகளும் நடந்து முடிந்து விட்டன. நமது ட்ரோன்கள் பெரும்பாலும் உள்நாட்டு தயாரிப்புகளே. இதற்கு பாகிஸ்தானால் ஈடுகொடுக்க முடியவில்லை. எதிர்காலம் ட்ரோன்களின் காலம் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
பெருக்காப்ஸுக்கு 8,000 முதல் 10,000 ட்ரோன்கள் வரை இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதில் முனைப்பு காட்டி வருகின்றனர். நவீன தொழில்நுட்பம் வாயிலாகவே எதிர்கால யுத்தத்தை சந்திக்க முடியும். லடாக் மிகவும் உயரமான பகுதி. குளிர்ச்சியான பகுதி. அங்கு கூட நமது ட்ரோன்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பைரவ் லைட் கமாண்டோ பெட்டாலியன்ஸ் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அஸ்திரங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதேபோல ருத்ரா பிரிகேடும் செயல்பட்டு வருகிறது. திவ்யஸ்த்ரா பேட்டரிகள் அதிநவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொண்டவை. 2027ம் ஆண்டுக்குள் ட்ரோன் நடவடிக்கைகளில் நாம் உச்சத்தை தொட்டு விட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மெகர்பாபா போட்டி 3ஐ பாரத விமானப் படை நடத்தியது. இதன் பிரதான கருப்பொருள் ட்ரோன் அடிப்படையிலான கண்காணிப்பு ரேடார்களாகும். இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஒற்றை ட்ரோனை நம்பிக் கொண்டிருக்காமல், அணி அணியாக ட்ரோன்களைப் பயன்படுத்தும் முறை எதிர்காலத்தில் மேலும் வலுவடையும். ஏற்கனவே நடத்தப்பட்ட 2 போட்டிகளின் வாயிலாக நம் பாரதத்துக்கு ரூ.2,000 கோடி மதிப்பிலான ஆர்டர் கிடைத்தது. 2021ம் ஆண்டிலேயே, குறிப்பிட்ட வகைப்பாட்டின் கீழ் வரும் ட்ரோன் இறக்குமதிக்கு பாரதம் தடை விதித்து விட்டது. உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளித்து வருகிறது.
2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 56வது ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன் ட்ரோன்களுக்கான வரி 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை இருந்தது. இது இப்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டது. 2025ம் ஆண்டு செப்டம்பர் 22 முதல் இது அமலில் உள்ளது. ராணுவ தர நிலை சார்ந்த ட்ரோன்கள் அதிநவீன பேட்டரிகள், ப்ளைட் சிமுலேட்டர்கள் ஆகியவற்றுக்கு முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நம் பாரதத்தில் 600க்கும் மேற்பட்ட ட்ரோன் புத்தெழுச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக 500 மில்லியன் டாலர் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என்பதை பொருளாதார புள்ளி விவரம் உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவின் மக்கள் விடுதலைப் படை திரள் ட்ரோன் உபயோகத்தை அதிகரிக்க எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எல்லைப் பகுதியில் பகைவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற அடிப்படையில், நம் ராணுவத்தினர் 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு ஆராய்ச்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு
வருவதால், புதிய சாத்தியங்கள் நனவாகி வருகின்றன. எதிர்கால யுத்தத்தின் மையப்புள்ளியாக ட்ரோன்தான் இருக்கும் என்பதை பாதுகாப்பு வல்லுனர்கள் உறுதிபட உரைக்கிறார்கள்.
2024-−25ல் ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.24,000 கோடியாக இருந்தது. 2029ம் ஆண்டில், இதை ரூ.50,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவது கடினமானதல்ல என்பதே நிதர்சனம்.
கட்டுரையாளர் : ஆய்வாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி