மிளிரும் புத்தொளி தொடரில் இரண்டாவது பேட்டிக் கட்டுரையைப் படிக்கிறோம். நாம் சந்திக்கும் பிரமுகர், நந்தலாலா கவிஞர். தேனி அருகில் எழுமலை என்ற ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். செல்வராசு என்ற இயற் பெயர் கொண்ட இவர், ‘இளம் வயதில் இடது சாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இலக்கின்றி தடுமாறிக்கொண்டிருந்த நான் சுவாமி ஓம்காரானந்தாவினால் தடுத்தாட்கொள்ளப் பட்டு ஆன்மீக – தேசிய பணியில் ஈடுபட்டு வருகிறேன் என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறார். இலக்கியப் பணிகளாக கவிதை எழுதுகிறார், சொற்பொழிவுகளை நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் நிகழ்த்துகிறார். 70க்கு மேற்பட்ட திரைப் படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். அவருடன் உரையாடுபவர் எம்ஆர்.ஜம்புநாதன்.
ஆன்மிகம் அளித்துக் காக்கும்
- ஒரு இலக்கியவாதிக்கு சமுதாயத்தைப் பற்றிய கடமை அல்லது கடமைகள் என்ன அல்லது எவை?
சமுதாயம் என்பது இரண்டாவது கருவறை. அது தார்மீகமாவும் தெய்வீகமாகவும் இருந்தால் அது உத்தம மனிதர்களை உருவாக்கும். இலக்கியவாதிகள் அதன் தார்மீக சுத்தத்திற்கும் தத்துவார்த்த இலட்சியத்திற்கும் எழுதியும் பேசியும் வருகிறவர்கள். அதுதான் அவர்களின் கடமையும் ஆகும்.
- இலக்கியவாதியானஉங்கள் பார்வையில் கொரானா . (உடல், உள , சமூக, பொருளாதார பாதிப்புகள்)
திடீரென மின் விளக்கு அவிந்து விட்டால் ,குழந்தைகள் மிரட்சி அடைவதைப் போல் பல முகங்கள் இருண்டு போய்விட்டன. இருள் எப்போதும் குழந்தை மனசில்தான் விபரீதக் கற்பனைகளை எழுப்புகின்றன. பெரியவர்கள்தான் தீப்பெட்டியைத் துழாவி தீபம் ஏற்றுகிறார்கள். அவர்களுக்கு இருள் கண்ட அச்சமில்லை. விபரீதக் கற்பனைகளும் இல்லை. இருள் என்பது முகம் திருப்பி நின்ற பகலின் கார்கூந்தல் என்ற புரிதல் அவர்களிடம் உண்டு. மீண்டும் வெளிச்சம் வரும். குழந்தைகள் தாம் ஆனந்தக் கூச்சலிடும். அப்போதும் அம்மாக்கள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அடுத்த வேளை சமையலில் இறங்குவதைப் போல புணர்நிர்மான வேலையில் பக்குவமானவர்கள் இறங்குவார்கள். கருணாநிதி ஆட்சியின் போது கப்பைக்கிழங்கு தின்று உயிர்பிழைத்தோம். இப்போது அப்படி ஒரு நிலை தேசத்தில் இல்லை.பழங்குடி மக்களைக்கூட தேடிப் போய் உதவிசெய்ய நிறுவனங்களும் நல்லுள்ளங்களும் இருக்கின்றன. பசியினால் ஒருமனிதனும் சாகக் கூடாது என்பது மிக முக்கியம். ஆனால் பசியைவிட எதிர்காலப் பயத்தில்தான் பல முகத்தில் வாட்டம் தெரிகிறது. எதிர்காலத்தை இறைவன் கையில் விட்டு விட்டு வாழப் பழகினால் தொல்லை இல்லை. இன்றும் வானமும் பூமியும் தம் கருணையை இழக்கவில்லை.அப்புறம் பயமேன் ?
- உங்களுக்குத்தென்படும் நம்பிக்கை தரும் நிகழ்வுகள், போக்குகள்..
கள்ளிச் செடியின் மீதே முல்லைக் கொடி படர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இராவணோடும் வாழ்ந்து முடித்த மண்டோதரியைப் படித்திருக்கிறேன். அவரவர் இயல்பில் அவரவர் வாழச் சம்மதிக்கும் உலகில் துளசியை மாடத்திலும் கள்ளிச்செடியை வேலிப்புறத்திலும் வைக்கும் அறிவு அழியவில்லை. களைபிடுங்கி பயிர் காப்பதை உழவன் விடவில்லை. வாழ்ந்து வழிகாட்டும் ஆன்மீக பெரியோர்கள் இன்றும் பலர் உள்ளனர். முன்னோர் சொன்ன நல் வாக்குகளை பாரத மக்களும் மறக்கவில்லை. அதனால் தான் நமக்கு ஊக்கமமும் உழைப்பும் உண்டே தவிர கவலை இல்லை களைப்பில்லை என்கிறேன்.