ஆசைப்பட்டு சேவை செய்வதற்கு அனுமாரைப் பார்

சேவையிலும் பொதுநலம்

போர்க்களத்தில் நினைவு இழந்து கிடக்கும் லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற அனுமார் சஞ்சீவினி மூலிகை கொண்டுவரப் புறப்பட்டார். மூலிகை அடையாளம் தெரியாததால் மலையையே பெயர்த்து எடுத்துக்கொண்டு இலங்கைக்குச் சென்றார். மூலிகையால் லட்சுமணன் உயிர் பிழைத்ததும் அனைவரும் அனுமாரைப் போற்றினார்கள். ஆனால் அந்த அருமையான மூலிகைகள் நிறைந்த மலையின் ஒரு பகுதியை உடைத்து இலங்கையில் வைத்துவிட்டு மீண்டும் அந்த மலை இருந்த இடத்திலேயே கொண்டு போய் வைத்துவிட்டு வந்தார் அனுமார். நோக்கம், ஒரு பொருளை எடுத்த இடத்தில் வைப்பது என்ற சாதாரண கட்டுப்பாடு.  இன்னொரு புறம் பொதுநலம். இந்த அரிய மூலிகைகள் எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்பதற்காக அங்கு திரும்பக் கொண்டுபோய் வைத்தார்  அறிவாளியான அனுமார்.

அந்தப்புரத்திலும் பிரம்மச்சரியம்

இலங்கைக்குள் வெற்றிகரமாக புகுந்த அனுமார், ராவணனின் அரண்மனையில் சீதாபிராட்டியை தேடினார். அந்தப்புரத்தில் பல பெண்களை தூங்குகிற கோலத்தில் பார்த்தார். ‘இதுபோல மாற்றான் மனைவியர் உறங்கும்போது பார்ப்பது, என்னதான் ராம காரியத்துக்காக நான் இதை செய்ய வேண்டியிருந்தாலும் என் பிரம்மச்சரிய தர்மத்திற்கு விரோதமானதல்லவா?’ அனுமார் இப்படி எண்ணமிடும்போது அவருக்குள் ஒரு பதிலும் உதயமாகி விடுகிறது: ‘என்னுடைய கண் என்னும் புலன் கொண்டு நான் இந்தக்  காட்சிகளை இப்போது பார்க்கிறேன். புலன்களை இயக்குவது மனது. என்னுடைய பிரம்மச்சரிய விரத வாழ்க்கை காரணமாக என் மனம் ஆரோக்கியமாகவே இருக்கிறது. எனவே நான் கவலைப்பட வேண்டியதில்லை. வீழ்ச்சி அடைந்து விட மாட்டேன்’ என்ற உறுதி அவருக்கு ஏற்படுகிறது. தன் தேடலைத் தொடர்கிறார். — இன்றைய இளைஞர்கள், யுவதிகள் இதில் கற்றுக் கொள்வதற்கு ஏதாவது இருக்கிறதா? யோசிப்போம்.

வீரியம் அல்ல, காரியத்தில் முனைப்பு

ஒரு பாறை மீது அமர்ந்திருந்தார் அனுமார். பக்கத்தில் சில வானரங்கள் அங்கும் இங்கும் துள்ளி குதித்துக் கொண்டு தங்களுக்குள் பேசிக்கொண்டன. நீ பத்தடி தாண்டினால் நான் இதோ 20 அடி தாண்டுகிறேன் பார் என்று இன்னொரு வானரத்திடம் ஒரு வானரம் சொல்ல, மூன்றாவது வானரம் இதோ நான் 50 அடி தாண்டுகிறேன் பார் என்று வீராவேசம் காட்டியது. களைத்துப் போய்விட்டன. “ஐயா, நாங்கள் இந்த பத்தடி இருபதடிக்கே திணறுகிறோம். நீங்கள் எத்தனையோ மைல் தொலைவு உள்ள கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றீர்களே, இப்போது தாவிக்காட்டுங்கள்” என்று  அனுமாரிடம் கேட்டன. அவர்களைப் பார்த்து சாந்தமாக சிரித்த அனுமார், “ராம காரியம் உயர்ந்த லட்சியம். அதை நிறைவேற்றும் போது சக்தி முழுவதையும் செலவிட்டேன். உங்களுக்கு வித்தை காட்டுவதற்காக அதுபோல எல்லாம் தாவிக் காட்ட மாட்டேன்” என்று பதிலளித்தார். அதன் பிறகு ராமர் பாலம் கட்டியபோது எல்லா வானரங்களும் ராம காரியம் செய்கிறோம் என்ற உணர்வோடு செயல்பட்டன. காரணம் அவர்களுக்கு ராம காரியத்தின் மேன்மையை இவ்வாறு மனதில் பதிய வைத்திருந்தார் அனுமார்.

மனம் தளரா சேவையின் மகத்துவம்

ராவண வதத்திற்கு பிறகு இலங்கை யிலிருந்து அயோத்தி செல்லும் வழியில் ராமேஸ்வரம் வந்தடைந்தார் ராமபிரான். பூஜை செய்வதற்காக லிங்கம் கொண்டு வரச் சொன்னார். அனுமார் சென்று லிங்கம் கொண்டு வர தாமதமாயிற்று. சீதாபிராட்டி கடற்கரை மணலைப் பிடித்து லிங்கம் சமைத்தார். அதைவைத்து ராமபிரான் பூஜை செய்தார். தாமதமாக வந்த அனுமார் மனம் வருந்தினாலும் இனி இதுபோல் தவறு நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மன உறுதி பூண்டாரே தவிர நொந்து போய் விடவில்லை. இதை உணர்ந்து கொண்டார் ராமபிரான்.  அயோத்தி நோக்கி மேலும் செல்லும்போது பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்த வேளையில், நந்தி கிராமத்தில் பரதனுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்று பார்த்துவரும் நுட்பமான, நாசுக்கான பணியை அனுமாரிடம் ஒப்படைத்தார்  ராமபிரான். அனுமாரும் அவ்வாறே சென்று பரதனின் மனநிலை எப்படி இருக்கிறது என்று கண்டு வந்து சொன்னார். ஒரு ஊழியனின் தளரா மனநிலையால் லட்சியத்திற்கு எவ்வளவு பெரிய  லாபம்!

முடிவு சுபம் ஆக வேண்டுமா?

அனுமார் இலங்கைக்குப் போகும் வழியில் மிரட்டலை சந்தித்தார், மீறினார். ஆசைகாட்டினார்கள், அதை உதறினார். தடைகளையெல்லாம் தகர்த்து இலங்கை அடைந்தபிறகு மிகவும் சிரமப்பட்டு அசோகவனத்தை கண்டுபிடித்தார். சீதாபிராட்டி முன் போய் நின்றார். அப்போது அவர் மனதில் இந்த எண்ணம் ஓடியது என்று வால்மீகி குறிப்பிடுகிறார்: ‘ராமபிரானைப் பிரிந்து அரக்கனின் ராஜ்ஜியத்தில் சிறைப்பட்டிருக்கும் போது கூட சீதா மாதா மனம் தளர்ந்து எந்த தவறான முடிவும் எடுக்கவில்லை. அதனால் தான் நான் இன்று அன்னையை சந்திக்க முடிந்திருக்கிறது. எதிர்ப்பு, வேதனை இவைகளால் மனது தளர்ந்து போய் விடாமல் தொடர்ந்து வாழ்கிறவர்கள், வாழ்வில் ஒரு நாள் ஆனந்தத்தின் சிகரத்தை தொட்டு விடுவார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. — இன்றைய நிலையில் இந்த அறிவுரை யாருக்கு என்று புரிகிறதல்லவா?

கஞ்சா தோட்டத்தில் துளசிச் செடி

கிஷ்கிந்தையில் வாலியும் சுக்ரீவனும் பரஸ்பரம் மாற்றான் மனைவிக்காக சண்டையிட்டு அதில் வாலி பலியான அந்த சூழலில், அன்னை அஞ்சனையின் நல்ல வளர்ப்பால் ஆஞ்சநேயன் பிரம்மச்சாரியாக வளர்ந்தான். ராமபிரானை சுக்ரீவனுக்கு அறிமுகம் செய்துவைத்தான். வாழ்நாள் நெடுக ராமபிரானுக்கு விருப்பத்தோடு சேவகம் செய்தான். இவ்வளவு விவேகமும் ஞானமும் அவனுக்கு வரப் பெற்றது சூரிய பகவானிடம் அவன் பெற்ற கல்வியினால் தான். உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே என்று சொல்லப் பட்டிருப்பதற்கு ஏற்ப சூரிய பகவானின் இடைநில்லாப் பயணத்தில் உடன் சென்று சூரியனிடம் கல்வி கற்றான். அனுமாருக்கு நவ வியாகரண பண்டிதன் என்ற பெயர் கிடைத்தாலும் அவனது அறிவும் ஆற்றலும் அவனது கிஷ்கிந்தா ராஜ்யத்திற்கும் ஹிந்துஸ்தானத்திற்குமே  ஒரு பொக்கிஷம் ஆயிற்று.