அறியாமை

ஒரு நாட்டு மன்னன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சுந்தர் என்ற ஒரு விறகுவெட்டி அவரை காப்பாற்றினான். சுந்தர் மன்னனின் உயிரைக் காப்பாற்றியதால், அந்த மன்னன் மனம் மகிழ்ந்தார். சுந்தர் காட்டில் உள்ள மரக்கட்டைகளை வெட்டி விற்று வாழட்டும் என்று நினைத்து ஒரு காட்டினை பரிசாகக் கொடுத்தார் அந்த மன்னன்.

ஆனால், சுந்தருக்கு மரக்கட்டைகளை வெட்டிக் கடைத்தெருவுக்கு சுமந்து செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் மரக்கட்டைகளைச் சுட்டுக் கரியாக்கிவிட்டான். பின்பு அந்த கரியாக்கிய மரக்கட்டைகளை மூட்டையாகக் கட்டிச் சுமந்துக் கொண்டு சென்றான். இப்படிச் செய்வது அவனுக்கு சுலபமாக இருந்தது. கரியைக் கொண்டு போய் விற்று பிழைப்பு நடத்தி வந்தான்.

இப்போது மழைக்காலம் வந்தது. விறகுக் கட்டைகளைச் சுட்டுக் கரியாக்க முடியவில்லை. அதனால் ஒரு விறகுக் கட்டையை மட்டும் மிகவும் சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு, சந்தைக்கு சென்றான். அங்கு ஒரு கடைக்காரர், சுந்தர் கொண்டு வந்த ஒரு மரக்கட்டைக்கு இரண்டாயிரம் ரூபாய் தருவதற்கு தயாராக இருந்தார். அதைக்கேட்ட சுந்தருக்கு என்ன இந்த ஒரு மரக்கடைக்கு இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன் என்கிறாரே! என்று குழம்பிப் போய் நின்றான்.

அந்த கடைக்காரரிடம், இந்த ஒரு மரக்கட்டைக்கு இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்கிறீர்களே! இது என்ன கட்டை என்று கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர், இது சந்தனக்கட்டை என்றும், அதன் மதிப்பு பற்றியும் கூறினார். அப்போதுதான் இத்தனை நாளும் சந்தனக்கட்டைகளைத்தான் சுட்டுக் கரியாக்கி, விலைக்கு விற்றிருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டான். அப்போதுதான் அவன் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம் என்பது புரிந்தது. சந்தனக்கட்டை என்ற விஷயம் முன்பே தெரிந்திருந்தால், நான் எவ்வளவு பெரிய பணக்காரனாகியிருப்பேன் என்று மனதிற்குள் தன் அறியாமையை எண்ணி வருத்தப்பட்டான்.

நீதி: நம்மில் பலரும் இப்படித்தான் அறியாமையால் நாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்து கொள்ளாமல் வாழ்கிறோம். அது பொருளாக இருந்தாலும் சரி, செயலாக இருந்தாலும் சரி அதனுடைய உண்மையான மதிப்பை அறிந்து செயல்பட வேண்டும்.