சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணிபுரியும் இராம. அருண் சுவாமிநாதனின் அறிக்கையில், ‘பல்லக்கை சுமந்து செல்வது அடிமைத்தனம் என்று கூறிவரும் தி.க வினர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் காலங்காலமாக நடக்கும் மதிப்புமிகு தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23ன் கீழ் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் கூறியுள்ளார். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 என்னவென்றால், ‘மனிதர்களை கடத்துவதும், கொத்தடிமை மனிதர்களை பணியில் வைத்தலும் குற்றம் கூறுகிறது. மேற்படி பட்டினப் பிரவேசத்தில் கொத்தடிமைகள் மூலம் ஆதீனகர்த்தரை தூக்கி சென்றால் அது குற்றமாக கொள்ளலாம். சீடர்கள், தம்பிரான்கள், ஆதீன கர்த்தர் அவர்களை ஆசானாக ஏற்றுக்கொண்ட மெய்யன்பர்கள் தாமாக முன்வந்து பல்லக்கில் பிரவேசிக்க வைப்பது கொத்தடிமைகள் என்ற பொருளில் வருமா? பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின், 1930 ஆண்டின் கட்டாய தொழிலாளர் மாநாட்டின் படி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23ன் படி இதில் கொத்தடிமைகள் யாரும் இதில் ஈடுபடுத்தப்படவில்லை. 26(பி)-ன் படி மதம் சம்மந்தமான தனது தனிப்பட்ட விவகாரங்களை கவனித்து கொள்ள உரிமை அளிப்பட்டுள்ளதால், சைவ சமயத்தை சார்ந்த மட நிகழ்வில் கோட்டாட்சியர் தலையிட எவ்வித அதிகாரமுமில்லை. ஒருவேளை ஹிந்து மதத்தை வெளிப்படையாக வெறுக்கும் தி.கவினர் புகார் அளித்தாலும், பிரச்சனை செய்ய முன் வந்தாலும் அவர்கள் மீது தான் கோட்டாட்சியர் சி.ஆர்.பி.சியின்படி நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர பல நூற்றாண்டுகளாக நடைபெறும் ஒரு வழக்கத்தை தடை செய்ய வருவாய் துறைக்கோ, காவல் துறைக்கோ எவ்வித அதிகாரமுமில்லை’ என தெரிவித்துள்ளார்.