அயோத்தி தீர்ப்பு – நவம்பர் மாத நிகழ்ச்சிகளை ரத்து செய்தது ஆர்எஸ்எஸ்

ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் அடுத்த 15 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்பதால், நவம்பர் மாதம் முழுவதும் நடக்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிர்வாகிகள் அனைவரும் தங்களின் நவம்பர் கால பயணத்தை ரத்து செய்யவும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில வழக்காகும். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அரோரா, சன்னி வக்பு வாரியம், ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் உரிமை கோரி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த 2.77 ஏக்கர் நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக்கொள்ளத் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் எஸ்ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியிலிருந்து நாள்தோறும் விசாரணை நடத்தி வந்தது. அனைத்துத் தரப்பினரின் வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் கடந்த 18-ம் தேதி தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒத்திவைத்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறும் நவம்பர் 17-தேதிக்குள்ளாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அயோத்தி தீர்ப்பு வெளியாக இருப்பதால் நவம்பர் மாதம் நடக்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, தனது தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரின் பயணத்தையும் ரத்து செய்து தங்களின் பொறுப்பான இடத்தில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஆர்எஸ்எஸ் அமைப்பு மிகவும் உணர்வுபூர்வமாகவும் எச்சரிக்கையாகவும் பார்க்கிறது. தீர்ப்புக்குப் பின் ஏதேனும் சம்பவங்கள் நடந்தால்கூட தங்களை யாரும் குற்றம் சாட்டிவிடக்கூடாது என்பதற்காக நிர்வாகிகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்னிட்டு ஹரித்வாரில் நாளை (வியாழக்கிழமை) முதல் நவம்பர் 4-ம் தேதி வரை தலைவர்கள் பங்கேற்கும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ரத்து செய்துள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பையாஜி ஜோஷி, தத்தாத்ரேயா ஹோசபலே உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களும், பாஜக தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்க இருந்தார்கள். ஆனால், அந்தக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

நவம்பர் 4-ம் தேதி அயோத்தியில் துர்கா வாஹினி நிகழ்ச்சியையும், 17-ம் தேதி லக்னோவில் நடக்க இருந்த ஏகல் கும்பம் என்ற நிகழ்ச்சியையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ரத்து செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்களுக்குரிய பொறுப்புகள் இருக்கும் இடத்தில் இருக்கவும், தலைமை உத்தரவுக்குப் பின் எங்கும் செல்ல வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.