காங்கிரசில் தற்போது நிகழும் பஞ்சாப், சத்தீஸ்கர் மாநில அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், காங்கிரஸ் மூத்த தலைவரும் அமித் ஷாவின் மிகப்பெரிய விமர்சகர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், பா.ஜ.கவை சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புகழ்ந்து பாராட்டி பேசியுள்ளார். போபாலில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றுகையில், ‘நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது ‘நர்மதா பரிக்ரமா’ யாத்திரையின் போது ஒருமுறை இரவில் தாமதமாக குஜராத்தை அடைந்தேன். அது சரியான சாலைகள், தங்குமிடங்கள் இல்லாத மலைப்பாங்கான வனப்பகுதி. அங்கு நான் சிக்கிக்கொண்டபோது ஒரு வனத்துறை அதிகாரி வந்து என்னை சந்தித்தார். எனக்கும் என்னுடன் வந்தவர்களுக்கும் அனைத்து உதவிகளை செய்யவும் பாதுகாப்பாக எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்ளவும் அமித் ஷா தன்னை அறிவுறுத்தியதாக கூறினார். அது ஒரு தொலைதூரப் பகுதி என்றாலும், எங்களுக்கு ஓய்வெடுக்க இடமும், நல்ல உணவும் கொடுக்கப்பட்டது. பயணத்திற்கும் உதவி செய்யப்பட்டு, நாங்கள் பாதுகாப்பாக வழியனுப்பப்பட்டோம். இத்தனைக்கும் அப்போது குஜராத்தில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அமித் ஷாவை நான் நேரில் சந்தித்ததில்லை, ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு எனது நன்றியை தெரிவித்தேன்’ என கூறியுள்ளார்.