அசோக் சிங்கால் : தேசக் கட்டமைப்பில் உறுதிபூண்டிருந்த தலைசிறந்த ஆளுமை!

ஆன்மிகத் தேடல், பண்பாட்டு விழிப்புணர்வு, பல ஆண்டுகள் அர்ப்பணிப்போடு, அமைப்பு ரீதியான பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்ட மகத்தான ஆளுமையான, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவராக இருந்த அசோக் சிங்காலின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவை, செப் 27 முதல் கொண்டாடுகிறோம்.
அவருடன் எண்ணற்ற முறை கலந்துரையாடி, அவரது அன்பைப் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காக, மேலும் என்ன செய்யலாம் என்ற சிந்தனை, அவரது மனதில் எப்போதும் எழுந்து கொண்டே இருந்தது.
நாட்டின் எந்த பகுதி இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டாலும், அங்கு முதலில் செல்பவர்களில் ஒருவராகவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தொண்டர்களை வழிநடத்துபவர்களில் ஒருவராகவோ, அசோக் சிங்கால் இருந்தார். கடந்த 2001-ல் நிகழ்ந்த குஜராத்தின் கட்ச் நிலநடுக்கத்திற்குப் பின், அவருடன் இணைந்து நான் மேற்கொண்ட பணிகள், என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.
அசோக் சிங்கால் விடா முயற்சியுடனும், கடின உழைப்புடனும் பல்வேறு நிறுவனங்களையும், இயக்கங்களையும் மேம்படுத்தினார். வலிமையான குரல் வளம், ஒட்டுமொத்தக் கூட்டத்தினரையும் தன்பால் ஈர்க்கும் வகையில் உரையாற்றும் சிறந்த திறன் ஆகியவற்றை அவர் பெற்றிருந்தார்.
அதேபோல், உடன் பணியாற்றிய தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் போற்றுதலுக்குரியது. அவருடன் பழகிய எவரும் அவரது குறிப்பிடத்தக்க எளிமையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. அசோக் சிங்காலைப் பற்றி குறிப்பிடும்போது, ராம ஜென்மபூமி இயக்கத்தில், அவரது முக்கியப் பங்கை நினைவுகூராமல் இருக்க முடியாது.
கடந்த 1991-ம் ஆண்டு போட் கிளப் மைதானத்தில் நடைபெற்ற பேரணியில், அவர் ஆற்றிய உரையை யாரால்தான் மறக்க முடியும்? அல்லது அந்த இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் காயமடைந்து, அசோக் சிங்கால் ரத்தம் சிந்திய நிலையில் காணப்பட்ட காட்சியை யாரால் மறக்க முடியும்?
இன்று உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் உருவாகியிருப்பதற்கு, அது சாத்தியமாக வேண்டும் என்பதற்காக, தன்னலமின்றி தங்களையே அர்ப்பணித்த அசோக் சிங்கால் போன்ற உன்னத தலைவர்களின் பங்களிப்பும் ஒரு முக்கியக் காரணம். அயோத்தியில் ராமர் கோயில் உருவெடுப்பதைக் காண நேர்ந்திருந்தால், அசோக் சிங்கால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.
சமூக ஒற்றுமையையும், சமத்துவத்தையும் வலுப்படுத்த அவர் தொடர்ந்து பாடுபட்டார். சமூகத்தில் எந்தவித பாகுபாடும் இருக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு தனிநபரும் சமமான கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்றும், அவர் உறுதியாக நம்பினார்.
அயோத்தியில் ராமர் கோயிலின் முதல் செங்கல், சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவைச் சேர்ந்தவரும், பிஹாரைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அடிமட்டத் தொண்டரான காமேஷ்வர் சவுபாலால் வைக்கப்பட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.
காசியில் நடைபெற்ற தர்ம சன்சத் கூட்டத்தில், டோம் ராஜாவுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று அவர் முடிவு செய்ததுடன், பல்வேறு சமூக நலப் பணிகளிலும் அவருடன் இணைந்து செயல்பட்டார்.
அசோக் சிங்காலின் நுாற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகத்துவத்தையும், பங்களிப்புகளையும் மேலும் பல இளைஞர்கள் அறிந்துகொள்வதை நாம் உறுதி செய்வோம்.
நம் தேசம் குறித்தும், மக்களைப் பற்றியும், அவர் கண்ட கனவுகளை நனவாக்குவதற்கான தீர்மானங்களை மீண்டும் நினைவுகூர்ந்து உறுதியுடன் செயல்படுவோம்! 