தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடமிருந்து பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்ற தாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, வரும் 31-ம்தேதி மொய்த்ராவை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று மஹுவா மொய்த்ரா நேற்று கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில் மேலும் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தர்ஷன் ஹிராநந்தானியை குறுக்கு விசாரணை செய்ய என்னை அனுமதிக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு அனுமதி தரவேண்டும். மேலும், அவர் ஆஜராகும் போது, எனக்கு அளித்ததாகக் கூறப்படும் பரிசுப் பொருட்கள் அடங்கிய பட்டியலையும் தர வேண்டும். அதுமட்டுமல்லாமல், குழு தனது இறுதி அறிக்கையைத் தயார் செய்யும் முன்பு ஹிராநந் தானி ஆஜராகி விளக்கம் தர வேண்டும். இதற்கு குழு தனது அனுமதியைத் தர வேண்டும்.
இவ்வாறு மஹுவா மொய்த்ரா கூறினார்.