ஹிந்து முன்னணி, ஹிந்து வியாபாரிகள் நலச்சங்கத்திலும் சிறப்பாக செயல்படும் வி.பி. ஜெயக்குமார் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, வி.பி.ஜெயக்குமார்ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா பரமன்குறிச்சி கிராமத்தில் வி.வி.பெருமாள் – ராமேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் வி.பி.ஜெயக்குமார். இவரோடு இவரது குடும்பத்தில் 7 சகோதரர்கள், 3 சகோதரிகள் உள்ளனர்.

1951ம் ஆண்டு, ஜூன் 26ம் தேதி பிறந்த இவர், 7ம் வகுப்பு வரை படித்துள்ளார். காங்கிரஸ் பிரமுகரான இவரது தந்தை யூனியன் சேர்மன், பஞ்சாயத்து போர்டு தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். எமர்ஜென்சிக்கு முன்பு, திருநெல்வேலியைச் சேர்ந்த டி.ஆர்.கிருஷ்ணன் மூலம் ஜன சங்கத்தில் சேர அழைப்பு வந்தது.

சில நாட்களில் தஞ்சை கோவிந்தசாமி, டி.ஆர்.கோபாலன் ஆகியோர் அவரது வீட்டிற்கு வந்து நேரில் சந்தித்து கட்சியில் இணையக் கோரினர். அதன் மூலம் ஜனசங்கத்தில் இணைந்தார்.அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

எமெர்ஜென்சியை எதிர்த்து திருநெல்வேலி தினந்தந்தி அருகில் எமெர்ஜென்சி எதிர்ப்பு மாநாடு, எம்.ஆர்.காந்தி ஏற்பாட்டில் நடந்தது. அதில் சென்று கலந்து கொண்டார். திமுக ஆட்சி கவிழ்ந்த பிறகு, தமிழ்நாட்டில் கைது நடவடிக்கை தீவிரமானது.

ஜெயக்குமாரின் பெயருக்கு ஜனசங்கத்தின் `ஜனதீபம்’ என்ற பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதன் அடிப்படையில் இவரது பெயரும் கைது பட்டியலில் இருந்தது. இந்திரா காங்கிரஸ் பிரமுகரான இவரது தந்தை உளவுத்துறை அதிகாரியான மணியிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று சொல்லி கைது செய்ய அனுமதிக்கவில்லை.

வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஜனசங்க பத்திரிகைகளை எடுத்து அவரது தந்தை எரித்து விட்டார். ஜனசங்க கொடியை எறிக்க முயன்றபோது, தந்ைதயின் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டார்.

நாகர்கோவில் இரண்டாவது ஹிந்து எழுச்சி மாநாடு தடை செய்யப்பட்டு, பலர் கைதானபோது அதை எதிர்த்து திருச்செந்தூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், செயின் சந்திரசேகர், சிவசுப்பு, பூவனம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கைதாகி, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

சிறையில் தாணுலிங்க நாடார், ராமகோபாலன் உள்ளிட்ட பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் ஜெயக்குமாரின் கைது பற்றிய செய்தியை தினமணி நாளிதழ் படித்து அறிந்து கொண்டனர்.

அவரது தந்தையார் குறித்து ஏற்கெனவே அறிந்திருந்ததால், அவரிடம் நெருங்கிப் பழகினார்கள். தொடர்ச்சியாக விடுதலைக்குப் பிறகும், ராமகோபாலன் ஜி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்.

பலமுறை போகாமல் இருந்தபோதும், தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு சுந்தர.லட்சுமணன் அழைப்பின்பேரில் சென்றிருந்தார். அங்கு இந்து முன்னணியில் பொறுப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரில் சிவசுப்பு, ஆர்.எஸ்.எஸ் ஷாகாவைத் துவக்கி நடத்தினார்.

அப்போது ஊரில் மாயாண்டி சுவாமி கோயில் திடலில் ஷாகா நடத்த பிரமைய்யா நாடார் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் முன்னின்று ஷாகா நடத்த பக்கபலமாக இருந்தார்.

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் முதலாமாண்டு பயிற்சியை கரூரிலும், இரண்டாம் ஆண்டு பயிற்சியை கர்நாடக மாநிலம் சென்னனஹள்ளியிலும், மூன்றாம் ஆண்டு பயிற்சியை நாகபுரியிலும் முடித்தார்.

1979ம் ஆண்டு நயினார்பத்தைச் சேர்ந்த வெற்றிவேல் நாடார் – தங்கம்மாள் தம்பதியினரின் மகளான சரஸ்வதி என்ற பிரேமாவதியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள். மூவருமே திருமணத்திற்குப் பின் சென்னையில் வசிக்கிறார்கள்.

இந்துமுன்னணி பொறுப்பேற்ற பின்னர், கோபால்ஜியினுடைய அன்பினால் தான் பக்குவம் அடைந்தேன் என்கிறார். உள்ளூரில் நாலுமூலைக்கிணறு – பரமன்குறிச்சி மக்களிடையே சிறு பிரச்சினை ஏற்பட்டபோது, போலீசாரின் தவறான நடவடிக்கை காரணமாக சாதி மோதலாக உருவெடுத்தது.

அதனை எதிர்த்து பொதுக்கூட்டத்தில் போலீஸின் தவறுகளைச் சுட்டிக் காட்டி பேசினார். தொடர்ந்து இரு சமுதாயத்தின் தலைவர்களுடன், வழக்கறிஞர் நீலகண்டன் தலைமையில், போலீசாரும் இணைந்து பேசியதில் பிரச்சினை தீர்ந்தது.

தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனை, கோபால்ஜி தொடர்பு கொள்ள கோரினார். அவர் ஜெயக்குமாரின் உறவினர். அவரது வீட்டு முன்பு ஆயிரக்கணக்கானோர் ஏதாவது ஒரு உதவி கேட்டு திரண்டிருப்பர்.

அந்தக் கூட்டத்தில் தானும் போனால் தன்னைப் பற்றி உறவினர்கள் என்ன நினைப்பார்கள் எனக் கருதி அவர் முடியாது என்றார். ஆனால் கோபால் ஜி, சமுதாய வேலை செய்யும்போது இதையெல்லாம் பொருட்டாக நினைக்கக் கூடாது. அவரைப் போன்றவர்கள் நமது இயக்கத்திற்கு தேவை என்று சொல்லி, அவரை பார்க்க வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவரை நேரில் சென்று சந்தித்தார். அதன்பயனாக, ஹிந்து இயக்கப் பணிகளுக்கு அவரது நட்பு பேருதவியாக இருந்தது.

உடன்குடியில் கிறிஸ்தியா நகரம் கிறிஸ்தவப் பள்ளியின் ஹிந்து விரோத நடவடிக்கையால் தனி ஹிந்து பள்ளி துவங்கியபோதும், பின்னர் அதன் அங்கீகாரத்திற்காக ஊர் பொதுமக்கள் உதவியோடு நடைபெற்ற சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவரது பங்கு முக்கியமானது.

தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் டாக்டர் அரசுராஜா, ராஜகண்ணன், வள்ளிமுத்து, பால்நாடார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இராம கிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளிக்கு அரசின் அங்கீகாரம் கிடைத்தது.

திருநெல்வேலி பெத்தேலில் படிக்க வந்த தந்தையை இழந்த ஹிந்து பெண்னின் மகளை, மெய்ஞானபுரம் கிறிஸ்வத மகளிர் பள்ளியில் படிக்க அனுமதித்தது. அந்தப் பெண் ஒரு சிலரின் அத்துமீறல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாள்.

அவளது பிணத்தை பிரேத பரிசோதனை செய்யாமலும், மெய்ஞானபுரத்தில் புதைக்காமல், உடன்குடி கிறிஸ்தியா நகரத்தில் கொண்டு புதைத்தனர்.

அதனை எதிர்த்து கொலைக்கு நீதி விசாரணைக் கோரி, பெரிய போராட்டம் நடத்தி, பிணத்தை மீண்டும் தோண்டியெடுத்து, பிரதே பரிசோதனை செய்ததுடன், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் எங்கெல்லாம்
ஆர்.எஸ்.எஸ் ஷாகா நடைபெற்றதோ, அந்தந்த ஊர்களில் திருவிளக்குப் பூஜை சிறப்பாக நடைபெற்றது.

தற்போது இந்து முன்னணியின் மாநிலத் துணைத் தலைவராக பொறுப்பு வகிப்பதோடு, மாநில ஹிந்து வியாபாரிகள் நல சங்கத் தலைவராகவும் பொறுப்பு ஏற்றுள்ளார். மாவட்டத்தில் எங்கெல்லாம் ஹிந்து விரோத நடவடிக்கைகள், அனுமதியில்லாமல் சர்ச் கட்ட முயல்கிறார்களோ அதையெல்லாம் தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஹிந்து சமுதாய ஒருங்கிணைப்புப் பணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் ஜெயக்குமார் ஜி, நம் அனைவருக்கும் முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.