ஹிந்து சமுதாய பாதுகாப்புக்கு ஓங்கி குரல் கொடுத்து தனது இறுதி மூச்சு வரை சங்கப் பணியில் ஈடுபட்டவர்

ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த முனிசுவாமி அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருமணி கிராமம், கே.வி.குப்பம் தாலுகா, லத்தேரி வட்டத்தில் 1920 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாள் பிறந்தார் முனிசுவாமி அவர்கள். அவருடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா மற்றும் மூன்று தங்கைகள். தந்தை போலீசாராக பணிபுரிந்தார்.
நன்றாக ஓவியம் வரைவார். ஓவிய ஆசிரியராக இருந்துள்ளார். சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்டு மூன்று முறை கைதாகி உள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தபால் நிலையத்திற்கு தீ வைத்து, தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளார். எஸ்.எஸ்.எல்.சி படித்து முடித்த பிறகு, கல்வித் துறையில் கண்காணிப்பாளராக (சூப்பரென்டன்ட்) பணிபுரிந்தார்.
அலுவலகப் பணியில் இருந்தபோது ஒருமுறை, மேடை நாடகத்தில் “ஏழை” கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்தார். அதனால் அவருடன் பணிபுரிந்தவர்கள், அடைமொழியுடன் சேர்த்து, “ஏழை முனிசுவாமி” என அழைக்கத் தொடங்க, காலப்போக்கில் அவரது பெயரே ஏழை முனிசுவாமி என்றானது.
1977 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று, சங்கரி மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது ஒருமுறை சைக்கிளில் வேலைக்கு செல்லும் போது, வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில், சங்க நிகழ்ச்சியொன்று நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வெளியில் இருந்து பார்த்து பரவசமடைந்து, உள்ளே செல்ல முயன்றார். அப்போது நுழைவுவாயிலில் பாதுகாப்புப் பணியில் (ரக்ஷக்) இருந்த ஸ்வயம்சேவக், சைக்கிளை வாங்கிக் கொண்டு நிகழ்ச்சி முடிந்து வரும்போது, தந்து விடுவதாகக் கூறினார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும் தனது சைக்கிளை அவரிடம் தந்து விட்டுச் சென்றார்.
சங்க நிகழ்ச்சியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செருப்பைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தார். இவ்வளவு அழகாக, நேர்த்தியாக செருப்பு அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதே என்றெண்ணி, சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடனே, அவருடைய சைக்கிள் அவரிடம் சரியாக கொடுக்கப்பட்டது. இதனைக் கண்டு மேலும் ஆச்சரியமடைந்தார். ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்து ஒரு நிகழ்ச்சி நடக்கிறதே, இது என்ன அமைப்பு என்ற விசாரித்து, சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
1980 ஆம் ஆண்டில், வேலூர் மாவட்ட இந்து முன்னணி தலைவரானார். 1981ல், வேலூர் நகர் ஆர்.எஸ்.எஸ் தலைவரானார். ஒரே நேரத்தில் இந்து முன்னணிக்கும்,
ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் தலைவராக இருந்த பெருமை இவரையே சாரும்.
வேலூரில் முஸ்லிம் ஆக்கிரமிப்புக் காரணமாக 400 ஆண்டுகளுக்கு முன்னர், வேலூர் கோட்டை கோயிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட ஜலகண்டேஸ்வரர் கோயிலின் சிவ லிங்கத்தை மீண்டும் அதே இடத்தில் நிறுவ தீர்மானித்து, 1981 மார்ச் மாதத்தில், இந்து முன்னணி வழிகாட்டுதலுடன், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் அதே இடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முக்கியப் பங்கு வகித்தார்.
1982 ஆம் ஆண்டில், அயோத்தி ராமர் கோயில் ரத யாத்திரை நிகழ்விற்கு தலைமை வகித்து, வேலூர் மாவட்டம் முழுவதும் எண்ணில் அடங்காத ஹிந்து எழுச்சிப் போராட்டங்கள் நடத்த முக்கியக் காரணமாக இருந்தார். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தியதால், பலமுறை சிறைவாசம் கண்டுள்ளார்.
1983ல், ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தின் ஆர்.எஸ்.எஸ் தலைவரானார். வேலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, ஒரு இடத்தில் மசூதி இருப்பதன் காரணமாக குறிப்பிட்ட அந்தப் பாதையில் ஊர்வலம் செல்லக்கூடாது என காவல்துறை நிர்பந்தப்படுத்திய போது, ஹிந்துக்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமல், சாலையின் நடுவே படுத்துப் போராடி, திட்டமிட்ட பாதையில் விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி பெற்றுத் தந்தார். இன்றும் அவர் வகுத்துக் கொடுத்த அந்தப் பாதையில், வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
1986ல், வட ஆற்காடு (தற்போதைய வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் இணைந்தது) மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்தார். சங்கத்தின் கல்வி நிறுவனமான வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சரஸ்வதி வித்யாலயாவின் தலைவராகவும் இருந்துள்ளார். சங்கத்தில் மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் முடித்துள்ளார்.
ஜெயலட்சுமி அம்மாளை திருமணம் செய்த முனிசுவாமி ஜிக்கு, நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே சங்கப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூத்த மகன் பர்வதராசன் ஜி, ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர், மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் அமைப்பின் ஸ்தாபன உறுப்பினர்.
இரண்டாவது மகன் நெடுமாறன் ஜி, ஓய்வுப் பெற்ற தமிழ் ஆசிரியர். பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் சட்டமன்ற பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். மூன்றாவது மகன் ஆறுமுகம் ஜி, ஓய்வுப் பெற்ற இன்ஜினியர். சங்கத்தில் தற்போது சென்னை மாநகர் செயற்குழு உறுப்பினர் (காரியகாரணி சதஸ்ய) பொறுப்பில் உள்ளார்.
நான்காவது மகன் திருநாவுக்கரசு ஜி, ஓய்வுப் பெற்ற மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர். தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சி மன்ற உறுப்பினர். தற்போது கிரீடாபாரதி அமைப்பின் மாநிலத் தலைவராக உள்ளார். மகள் மணிமேகலை அம்மாள் ஓய்வுப் பெற்ற முதுகலை ஆசிரியர். மற்றொரு மகள் மங்கையர்க்கரசி அம்மாள், இல்லத்தரசியாக இருந்தவர், இயற்கை எய்தி விட்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை சாங்கிக்கிற்கு (சங்க வாரக்கூடுதல்) முனிசுவாமி ஜி வரவில்லை என்றால், வேலூரில் அவர் இல்லை எனப் புரிந்துக் கொள்ளலாம். அந்தளவிற்கு தொடர் சங்கப் பணியில் ஈடுபட்ட முனிசுவாமி ஜி, 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் நாள் இயற்கை எய்தினார்.
வயது முதிர்வின் காரணமாக, கடைசி காலத்தில் சங்க நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்த போதும், தொடர்ந்து ஹிந்து சமுதாயப் பணியில் ஈடுபட்ட முனிசுவாமி ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.