ஹிஜாப் அணியாதவர்கள் மிருகம்

தெற்கு ஆப்கனில் உள்ள காந்தகார் நகர் முழுவதும் தலிபான்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், ‘பெண்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும். அப்படி அணியாத பெண்கள் மிருகங்களைப் போல தோற்றமளிக்க முயல்கின்றனர். குட்டையான, இறுக்கமான, மெல்லிய ஆடைகள் அணிவது தலிபான் கொள்கைகளுக்கு எதிரானது என்கிற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து ஆப்கன் அமைச்சக அதிகாரி அப்துல் ரஹ்மான் தயேபி கூறுகையில், “முகத்தை மறைக்காமல் பொது இடங்களுக்கு வரும் பெண்களுக்காகவே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. உத்தரவை மதிக்காத பெண்களின் வீட்டில் உள்ள ஆண்கள், அரசு வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார். சமீபத்தில் துப்பாக்கி முனையில் ஆட்சியை பிடித்த தலிபான்கள், மீண்டும் பெண்கள் மீதான தங்களது அடக்குமுறைகளை தொடங்கியுள்ளனர். முதலில் பெண்களுக்கான கல்வி உரிமை பறிக்கப்பட்டது. பிறகு பெண்கள் தனியாக வெளியே செல்ல தடை, புர்கா, பர்தா, ஹிஜாப் அணியாமல் செல்லக் கூடாது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்களும்கூட உடலை முழுவதுமாக மூடி இருக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.