”அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையை அமைத்துள்ளது. இதில், தலித் ஒருவர் உட்பட, 15 உறுப்பினர்கள் இடம் பெறுவர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு, நவ., 9ல் தீர்ப்பு வழங்கியது.அதில், ‘சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்; அயோத்தியில், மசூதி கட்டிக் கொள்ள, முஸ்லிம்களுக்கு, முக்கியமான இடத்தில், 5 ஏக்கர் நிலத்தை, உ.பி., அரசு ஒதுக்க வேண்டும்; ராமர் கோவில் கட்டு வதற்கான அறக்கட்டளையை, மத்திய அரசு மூன்று மாதத்தில் அமைக்க வேண்டும்’ என்றது.
5 ஏக்கர் நிலம்
இந்நிலையில், டில்லி யில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடப்ப தால், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, பார்லி.,யில் தான் முதலில் தெரிவிக்க வேண்டும்.இதையடுத்து, லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயாராக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் இது செயல்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான விரிவான திட்டங்களையும் மத்திய அமைச்சரவை உருவாக்கியுள்ளது.
இதன்படி, 67.77 ஏக்கர் நிலம் முழுவதும் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மசூதி கட்ட, 5 ஏக்கர் நிலம், சன்னி வக்பு வாரியத்திடம் வழங்கப்படும். இந்த நிலத்தை, உத்தரபிரதேச அரசு வழங்கும். அயோத்தி தீர்ப்பு வெளியானவுடன், ஜனநாயகத்தின் மீது தங்களுக்குள்ள உறுதியான நம்பிக்கையை, மக்கள் சிறப்பாக வெளிப்படுத்தினர். இதற்காக, 130 கோடி மக்களுக்கும், என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட, நாம் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, பிரதமர் மோடி கூறினார். பிரதமர் பேசி முடித்தவுடன், பா.ஜ., உறுப்பினர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்’ என, கோஷம் எழுப்பினர்.அயோத்தி கோவிலுக்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டது குறித்து, லோக்சபாவில் பிரதமர் மோடி அறிவித்த வுடன், ‘அந்த அறக்கட்டளையில், தலித் ஒருவர் உட்பட, 15 உறுப்பினர்கள் இடம் பெறுவர்’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு நன்றி
இது பற்றி, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் அமித் ஷா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கும் முடிவை எடுத்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளையில், தலித் ஒருவர் உட்பட, 15 பேர் உறுப்பினர்களாக இருப்பர். ராமர் கோவில் கட்ட, 67.77 ஏக்கர் நிலமும், இந்த அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும்.
கோவில் கட்டுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும், அறக்கட்டளையே எடுக்கும். நாடு முழுவதும், இந்த நாள், மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. அயோத்தியில், ராமர் பிறந்த இடத்தில் எழுப்பப்படும் பிரமாண்ட கோவிலை காணவும், ராமரை வழிபட்டு தரிசனம் செய்யவும், கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்; அவர்களின் நம்பிக்கை விரைவில் நிறைவேற உள்ளது. இவ்வாறு, அமித் ஷா கூறியுள்ளார்.
இதற்கிடையே, அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள, ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளையின் அலுவலகம், ஆர் – 20, கிரேட்டர் கைலாஷ் பகுதி – 1, புதுடில்லி என்ற முகவரியில் செயல்படும் என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதித்து, உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பை செயல்படுத்துவது அரசின் கடமை. நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளதற்காக, நன்றி தெரிவிக்கிறேன்.
உத்தவ் தாக்கரே
மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைத்துள்ளதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். அறக்கட்டளை, சுதந்திரமாக செயல்படும். கோவில் கட்டுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும், அறக்கட்டளையே எடுக்கும். ஜெய் ஸ்ரீராம்.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,
டில்லி தேர்தலுக்கு தொடர்பில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதற்கும், டில்லி சட்டசபை தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை; இரண்டையும் ஒன்றாக இணைத்து பார்ப்பது தவறு’ என, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, மூன்று மாதத்துக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்தக் கெடு, வரும், 9ம் தேதியுடன் முடிகிறது. அதனால் தான், அறக்கட்டளையை அரசு அமைத்துள்ளது. இதற்கும், டில்லி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒன்றாக இணைத்து பார்ப்பது தவறு. ஏனெனில், நாடு முழுவதும் தேர்தல் நடக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
அனுமதி தேவையில்லை
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைத்துள்ளது பற்றி அறிவிக்க, எங்களின் ஒப்புதலோ, அனுமதியோ தேவையில்லை’ என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது உ.பி., அரசு
அயோத்தியில் மசூதி கட்ட, 5 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியத்துக்கு, உத்தர பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது.இது பற்றி மாநில அரசின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது: அயோத்தியிலிருந்து, 18 கி.மீ., துாரத்தில், லக்னோ நெடுஞ்சாலையில், தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட, 5 ஏக்கர் நிலம், சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
லக்னோவில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டதுமுன்னதாக, மூன்று இடங்களில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த இடத்தை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, இந்த நிலத்தை ஒதுக்க, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நிலம் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், போக்குவரத்து வசதிகள் சிறப்பாக உள்ளன. சட்டம் – ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.