ஸ்ரீரங்கப்பட்டணா சலோ

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணா நகரில் வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த ‘ஸ்ரீரங்கப்பட்டணா சலோ’ பேரணியை முன்னிட்டு அம்மாநில அரசு அங்கு 144 தடை உத்தரவு விதித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 4 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செய்திகளின்படி, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ஜாமியா மசூதியை நோக்கி பேரணியாக சென்று அந்த மசூதிக்குள் ஹிந்து மத பூஜைகளை நடத்த அழைப்பு விடுத்தனர். ஜாமியா மசூதி 1782ம் ஆண்டு ஹனுமான் கோயிலை இடித்து திப்பு சுல்தான் கட்டியதாக ஹிந்து அமைப்புகள் தெரிவிக்கின்றன. கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ‘ஒவ்வொரு அமைப்புக்கும் அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க உரிமை உண்டு, ஆனால் சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கை பராமரிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். இதற்கிடையில், பள்ளிவாசல் அதிகாரிகள் அதை பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாண்டியா துணை ஆணையர் எஸ். அஸ்வதி, ‘மஸ்ஜித் வீதி மூடப்பட்டுள்ளது. இன்று மசூதிக்குள் மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணி, ஊர்வலம் அல்லது போராட்டம் நடத்த அனுமதி இல்லை’ என்று கூறினார்.