தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 6-ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தூத்துக்குடி கிராமவாசிகள் நவம்பர் 28-ல் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து வேதாந்தா குழுமத்தின் அந்த ஆலை மூடப்பட்டது. இதன் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சூழலில், தூத்துக்குடி கிராமவாசிகள் டெல்லிக்கு வந்து ஜந்தர்மந்தரில் கடந்த 28-ம்தேதி போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் பெண்கள் மற்றும் வயதானவர்கள் உட்பட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான பதாகைகளை அவர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். ‘போராடிய போராட்டம் போதும்! விரைவில் ஸ்டெர்லைட் ஆலைக் கதவுகள் திறக்கட்டும்!’, ‘நாங்கள்இழந்த வாழ்வைத் தேடுகிறோம்! ஜந்தர் மந்தரில் நின்று வேண்டுகிறோம்!’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் பதாகைகளில் இடம் பெற்றிருந்தன