ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று எனப் பாடிய பாரதி சுதந்திரத்துக்கு முன்பே காலமாகிவிட்டார்.
அதே பாரதி, மகாத்மா காந்தியை புகழ்ந்து, “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னைவாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!” என்றும் பாடினார்.
அதாவது, சுதந்திரம் என்று வந்துவிட்டால், தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நிற்கும் தேசம் நிமிர்ந்து விடும், அதற்கு காந்தி காரணமாயிருப்பார் என்பது அவன் கற்பனை. ஆனால் காந்தி ஆட்சியில் அமரவில்லை. காங்கிரஸ்தான் அமர்ந்தது. சுதந்திரம் பெற்றும் விடுதலை பெறாத ஆண்டுகள் தான் இந்த நீடித்தன. பாரதியின் பாடலுக்கு இலக்கணமாக வந்து சேர்ந்தான் நரேந்திரன்.
ஆம், பிரதமர் மோடியின் 76வது பிறந்த தினம் கடந்த 17 அன்று நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரது ஆட்சிப் பயணத்தில், அதாவது கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டிருக்கின்றனர். காரணம் இந்த ஆட்சியில் “சேவை”, நல்லாட்சி, ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கான நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா, தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவை முக்கியமான கருப்பொருள்களாக இடம் பெற்றதுதான்.
ஜன்தன், உஜ்வலா, முத்ரா, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் மூலம் அரசின் நலத்திட்டங்களை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேநேரத்தில், இந்தியாவின் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் உலகளாவிய உறவுகளுக்கும் அவரது ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
பாரதி சொன்ன காரணங்களால் தாழ்வுற்று நீண்ட தேசம் தலை நிமிர்ந்தது. எனவே தான் அவரது பிறந்த தினம் ஒரு தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வாக மட்டுமல்லாமல், அவரது நீண்டகால பொது வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூரும் நாளாகவும் அமைந்துள்ளது.
வரும் 2026 அக்டோபரில் அவர் தனது பொதுஜன சேவையில் தொடர்ச்சியான 25 ஆண்டுகால முதன்மை நிலை வாழ்க்கையை நிறைவுடன் கடக்கிறார்.
என் வாழ்க்கையே என் செய்தி என்ற மகாத்மாவின் வாசகத்தை அக்டோபர் 2ல் நினைவுகூரும் நம் வாசகர்கள் அந்த வாசகத்துக்கு இன்றைய நிலையில் பொருத்தமான மனிதர் பிரதமர் மோடி மட்டுமே என்பதையும் நினைவு கூர வேண்டும். வாழ்க நீ எம்மான் என பிரதமர் மோடியை வாழ்த்துவதில் விஜய பாரதம் பெருமை கொள்கிறது.