‘எஸ்.சி., – எஸ்.டி., சட்டம் எனப்படும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தாலே, அந்த புகாருக்கு உள்ளானோரை கைது செய்யும் வகையில், அந்த சட்டத்தில் விதிமுறைகள் இருந்தன. இந்த சட்ட விதிமுறைகளால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மனு தாக்கல்:
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உயர் அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல், அரசு அதிகாரிகளையும், போலீஸ் உயர் அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் பொதுமக்களையும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கூடாது’ என, கடந்தாண்டு தீர்ப்பளித்தது. இதன்படி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், யாரையும் உடனடியாக கைது செய்ய முடியாது. உரிய விசாரணைக்கு பின்பே கைது செய்ய முடியும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினர், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்த சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்தது. ஏற்கனவே இருந்த கடுமையான விதிமுறைகள் மீண்டும் சேர்க்கப்பட்டன. இதன்படி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டாலே, விசாரணையின்றி கைது செய்ய முடியும்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே அளித்த தீர்ப்பை ரத்து செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். புகார் அளித்தாலே, கைது செய்யலாம் என, ஏற்கனவே இருந்த விதிமுறை தொடரும் என, தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு செய்த திருத்தம் செல்லாது என உத்தரவிட வேண்டும். இந்த சட்ட திருத்தத்தால், அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர். ‘உத்தர பிரதேசத்தில், கலவரத்தில் ஈடுபட்டோர் மீது புகார் கொடுக்கச் சென்றால், போலீசார் எங்கள் மீதே வழக்கு பதிவு செய்கின்றனர்’ என, உச்ச நீதிமன்றத்தில், சில அமைப்புகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஒத்தி வைப்பு
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த சட்டத்தில் ஏற்கனவே என்ன நடைமுறை, விதிமுறை இருந்ததோ, அது தொடரும். அதே நேரத்தில், ஒருவரது பாதுகாப்பு மற்றும் தனி மனித சுதந்திரத்துக்கு தடை விதிக்கும் வகையிலான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் கைது செய்யப்படுவோருக்கு முன் ஜாமின் அளிப்பது, விசாரணைக்கு பின் கைது செய்வது ஆகியவை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவு படுத்தி விட்டது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.