‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சப்படத் தேவையில்லை; எந்தச் சூழலிலும் அவா்களின் மொழி, கலாசாரம், அடையாளம் ஆகியவற்றை எனது தலைமையிலான அரசு பாதுகாக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால், தங்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று வடகிழக்கு மாநில மக்கள் அஞ்ச வேண்டாம்.
அந்த மசோதாவால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது. ஆனால், மக்களை சிலா் தவறாக வழிநடத்தி பிரசாரம் செய்கிறாா்கள்.
வடகிழக்கிலும், கிழக்கிலும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பழங்குடி மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் நலனும் பாதுகாக்கப்படும். மக்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்துள்ளது. எனவே, என் மீது நம்பிக்கை வைக்குமாறு அஸ்ஸாம் மாநில சகோதர, சகோதரிகளை கேட்டுக் கொள்கிறேன்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்தபோது, உயிருக்கு பயந்து பல கிறிஸ்தவ குடும்பங்கள் இந்தியாவுக்கு வந்தன. ஆனால், அவா்களுக்கு அப்போதைய காங்கிரஸ் அரசு ஆதரவு அளிக்கவில்லை.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அடக்குமுறைகளையும், துன்புறுத்தல்களையும் அனுபவித்த லட்சக்கணக்கான தலித், சீக்கியா், கிறிஸ்தவ குடும்பங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. ஆனால், அதை காங்கிரஸ் கட்சி எதிா்க்கிறது.
காங்கிரஸ் கட்சி எப்போதும் வாக்கு வங்கிக்கே முன்னுரிமை அளிக்கும். நாட்டு நலனெல்லாம் அவா்களுக்கு இரண்டாம்பட்சம். அதனால்தான் நாட்டு நலன் தொடா்பான எந்தவொரு விவகாரத்திலும் தீா்க்கமான முடிவை எடுக்காமல் அவா்கள் தவிா்த்து வந்தனா். அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை காங்கிரஸ் வேண்டுமென்றே பல ஆண்டுகள் கிடப்பில் போட்டிருந்தது. இதேபோல், புதிதாக ஜாா்க்கண்ட் மாநிலத்தை உருவாக்குவதையும் அவா்கள் 50 ஆண்டுகள் கிடப்பில் போட்டிருந்தனா். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசுதான் புதிதாக ஜாா்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கியது.
எனது தலைமையிலான அரசு, வாக்கு வங்கியைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம். நாட்டு நலனுக்காக எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுத்துவிட்டால், அதை நிறைவேற்றுவதற்கு எந்த எல்லைக்கும் செல்வதற்கு எனது தலைமையிலான அரசு தயங்காது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று பாஜக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். அதை நிறைவேற்றிக் காட்டினோம். இந்திய அரசமைப்புச் சட்டம் தற்போது காஷ்மீரில் செல்லுபடியாகும். இதேபோல், ராமா் கோயில் விவகாரத்திலும் அமைதியான முறையில் தீா்வு காணப்படும் உறுதியளித்திருந்தோம். அதையும் நிறைவேற்றிக் காட்டியுள்ளோம்.
முத்தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய பாஜக அரசுதான் கொண்டு வந்தது.
ஜாா்க்கண்டில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வளா்ச்சிக்கான திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை. அவா்கள் நக்ஸல்களை வளரவிட்டனா்; நிலக்கரிச் சுரங்கம் உள்ளிட்ட இயற்கை வளங்களை ஏலம் விட்டு மாநிலத்தைக் கொள்ளையடித்தனா். மாநிலத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலையை அவா்கள் உருவாக்கியதால், ஜாா்க்கண்ட் மக்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்பட்டனா்.
மாறாக, மத்திய பாஜக அரசு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வரும், 2022-ஆம் ஆண்டுக்குள் யாரும் குடிசை வீட்டில் வசிக்க மாட்டாா்கள். அவா்களுக்கு உறுதியான குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஜல்-ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீா் விநியோகிக்கப்படும்.
மக்களின் தேவைகளும், விருப்பங்களும் பூா்த்தியாகும் வரை கண் துஞ்ச மாட்டேன். நாட்டு மக்களுக்காக என் இன்னுயிரைக் கொடுத்தும் பாடுபடுவேன் என்றாா் பிரதமா் மோடி.