ராமானுஜரின் சித்-அசித்-ஈஸ்வரன்- எனும் கோட்பாட்டின் விளக்கம் என்ன?

*  ராமானுஜரின் சித்-அசித்-ஈஸ்வரன்- எனும் கோட்பாட்டின் விளக்கம் என்ன?

– ஜி.ஆர். ராகவன், காகிதபுரம்

அஞ்ஞானம் எனும் அசித்தை நீக்கி ஞானத்துடன் சித்தத்தை இறைவன் மீது வைத்தால், ஜீவாத்மா ஆகிய நாம் பரமாத்மாவை அடையலாம்.

கர்ம யோகம், ஞான யோகம் இரண்டில் எது சிறந்தது?

– ஆர். ராஜலஷ்மி, திருவல்லிக்கேணி

உங்கள் கேள்வியில் பக்தி யோகத்தை ஏன் விட்டு விட்டீர்கள்? இறைவனை அடைவதற்கு மூன்றுமே வழிகள்தான். அது அது அதனதன் வழியில் உயர்ந்ததே.

கண்ணன் குழலூதும் படத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்திற்கு ஆகாது என்பது உண்மையா?

– ராம. சாமிநாதன், திருவையாறு

பரம்பொருள் ஒன்றே என்கிறது ஹிந்து தர்மம். அதனை நாம் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம். அந்தப் படம் வைப்பதில் நெருடல் இருந்தால் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், கீதாசாரியன் படங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

* கல்வி கற்பிக்கப்படுகிறதா? விற்கப்படுகிறதா?ramanujar

– மு. சடகோபன், சேரன்மகாதேவி

ஒரு காலத்தில் நமது நாட்டில் கல்வி, மருத்துவம், உணவு மூன்றும் விற்கக்கூடாது என்ற நிலை இருந்தது. இன்று அதுவே பணம் கொழிக்கும் வியாபாரமாகி விட்டது. பள்ளி கல்லூரிகளில் சேருவதற்கு நன்கொடை வசூலித்த காலம் போய் இன்று பொதுத்தேர்வில் முதலிடம் பெற (பிகார்) பணம் கொடுத்தால் கிடைக்கும் நிலை உருவாகிவிட்டது.

* தனக்காக உழைப்பது – குடும்பத்திற்காக உழைப்பது – மற்றவர்களுக்காக உழைப்பது – இதில் எது சிறந்தது?

– டி.என். ரங்கநாதன், திருவானைக்கோவில்

தனக்காக உழைப்பது சுயநலம்; குடும்பத்துக்காக உழைப்பது கடமை; மற்றவர்களுக்காக உழைப்பது புண்ணியம் – இதனை சுவாமி விவேகானந்தர் மற்றவர்களுக்காக வாழ்வோரே வாழ்வோர், பிறர்  நடைபிணங்கள் என்கிறார்.

சுவாதியின் கொலைக்கு ராம்குமார் காரணம் இல்லை என்கிறாரே அவரது வக்கீலும் அப்பாவும்?

– ஜி. திருப்பதிராஜ், ராஜபாளையம்

ஆமா ஆமா எங்க ஆள் தான் கொலை செய்தார் என்று அவரது வக்கீலோ, எனது மகன் தான் கொலை செய்தான் என்று அப்பாவும் கூறுவார்களா என்ன? சுவாதி தன் கழுத்தை தானே வெட்டி தற்கொலை செய்து கொண்டாள். ராம்குமார் கழுத்தை யாரோ முன் விரோதம் காரணமாக வெட்டி விட்டனர் என்றெல்லாம் கூட சொல்வார்கள்!

மத்திய அரசின் ஒத்துழைப்புடன் திமுக தோற்கடிக்கப்பட்டது என்கிறாரே கருணாநிதி?

– ரேவதி சுந்தர், கிருஷ்ணன்கோவில்

ஐயோ பாவம்… ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்.

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.