ராணுவத் தொழில் பொதுவழித்தடம்,  ராணுவத்தால் தமிழகத்திற்கு ‘ஜாக்பாட்’

 

ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் தொழில்கள் நிறைந்த வட்டாரமாக, தமிழகம் மாறவிருப்பதால், அங்கு தொழில் தொடங்க  வாருங்கள்,‘ என இருகரம் நீட்டி, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில், சிறு, குறு தொழில் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் கோவை, திருச்சி, சென்னை போன்ற இடங்களில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திய வண்ணம் இருக்கின்றனர்.  ஒவ்வொரு ஊரிலும் பாதுகாப்புத் துறை தேவைகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இன்னின்ன, என்பனவற்றை  அவர்களுக்கு விரிவாக சொல்கிறார்கள். அதே நேரம், இந்த சிறு குறு அமைப்புக்கள் ஒவ்வொன்றின் தற்போதைய  திறன் என்ன; என்ன மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்பதையும், பிற நுட்பமான விஷயங்களையும் சொல்ல தயார் நிலையில் உள்ளனர் அதிகாரிகள். பின்னர், இவர்கள்   எவ்வளவு உற்பத்தி செய்ய முடியும் என தெரிந்த பின், தளவாடங்களை அவர்கள் தனியாகவும், மற்ற நிறுவனங்களோடு சேர்ந்தும் தயாரித்துக் கொடுக்க முடியும்.

ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை, ‘ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்’ போன்றவை இந்த வட்டாரத்தில் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றையும் இதர தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து அவர்களுடைய கவனத்தை, பாதுகாப்புத் துறையின் தேவைகளின் பக்கம் திருப்ப முயற்சி

செய்கிறோம். அப்போது தான் உற்பத்தியாகும் கருவிகளின் விலை குறையும். தேவையற்ற உபரிச் செலவுகள் இருக்காது. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால்தான் ராணுவ பெருவழித்தடம் சென்னை, கோவை, திருச்சி, ஓசூர், சேலம் நகரங்களுக்கு அடித்த, ‘ஜாக்பாட்’! ஏற்கனவே, இந்தப் பகுதிகளில், ‘மெஷின் டூல்ஸ்’ சப்ளை செய்பவர்கள், ஸ்டீல் ரோலிங்,  ‘மெட்டல் ஃபேப்ரிகேஷன்’ செய்கிறவர்கள், ‘லேசர் வெல்டிங்’ போன்ற பல உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருசிலர், பாதுகாப்புத் துறைக்கு கருவிகள் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கலாம். இப்போது, அவர்களுக்கு பாதுகாப்புத் துறையில் தம்மை மேலும் மெருகேற்றும்   வாய்ப்பு திறந்து விடப்படுவதால், மேலும் பலர், இதில் ஈடுபடுவார்கள் என்பது உறுதி. தமிழகத்தில் நலிவடைந்து உள்ள நிறுவனங்கள் கூட, இதன் மூலம் வளர்ச்சி அடையும்..

பெருவழித்தட நிறுவனங்களுக்கு பொதுவான வசதிகள், ஏதேனும் வேண்டு மென்றால் அவற்றை மத்திய அரசு நிறுவித்தரப் போகிறது. உதாரணமாக, ‘டெஸ்டிங்’ வசதி.  தனியார் துறையைச் சேர்ந்தவர்கள், ஒரு கருவியை உருவாக்கினால், அதை அரசாங்கத்திடம் வந்து, பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற வேண்டும். அதற்கு அவர்கள், இனி, டில்லிக்கு போக  வேண்டியதிருக்காது.  பரிசோதனை செய்வதற்கான வசதியை, பெருவழித்தடத்திலேயே   ஏற்படுத்தித் தரும் முயற்சில் ஈடுபடப்போகிறது அரசு. ராணுவத் துறைக்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் பட்சத்தில், வாங்கிக் கொள்வோம். எங்கள் தேவை என்ன, எந்தத் தரத்தில் இருக்க வேண்டும் என்பதை சொல்லி, அதற்கான பயிற்சிகளையும் தருகிறோம். பின்னர், ஒரு சோதனை முயற்சி செய்வோம். அந்தச் சோதனையில், அந்த பொருள், வெற்றி பெற்றுவிட்டால் ராணுவத் துறை அவற்றை வாங்கிக் கொள்ளும்.  ஆனால், அந்த அளவுக்கு, இங்கேயுள்ள நிறுவனங்களும், தங்கள் தரத்தை உயர்த்த வேண்டும். இந்த விஷயத்தில், ‘எங்களிடம் இத்தகைய திறன்மிகு தயாரிப்பு திட்டம் கைவசம் உள்ளது. ஆனால், தொழில் தொடங்கும் ஆர்வமோ எண்ணமோ இல்லை,‘ என்று நினைப்பவர்கள் கூட துறையின் உதவியை நாடலாம். அத்தகைய திட்டத்தை நல்ல உற்பத்தியாளருக்கு வழங்கி, அதைச் செயல்படுத்த  அந்த நிறுவனத்தோடு இத்தகைய ஆர்வலர்களை இணைப்போம்.

தமிழகம் முழுமையாக நகரமயமாகிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலம். உற்பத்தி துறையில் ஆணி வேராக விவசாயம் இருந்தாலும், தமிழகம், ஒரு தொழில் மாநிலம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பருத்தி உற்பத்தி தொடங்கி மென்பொருள் வரையிலும் அத்தனை விதமான உற்பத்திகளும் நடைபெறுகின்றன. தனியார் துறையில் தமிழத்தில் பலரும் இப்போது கப்பல் கட்டுவது, ‘ஏரோஸ்பேஸ்’ ஆகிய துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிதி உதவியை பொறுத்தவரை, ஏற்கெனவே, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டம் இருக்கிறது. வங்கிகளோடு ஒருங்கிணைப்பு வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, நிதி வசதி செய்து தருவதற்கான வாய்ப்பும் உண்டு.

ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களும் இங்கே தொழில் கூடங்கள் தொடங்க வழித்தடத்தில்  வாய்ப்புக்களை திறந்தே வைத்துள்ளோம்.

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்களைத் தொகுத்தளிப்பவர் : ஆர் கிருஷ்ணமூர்த்தி

ராணுவ கண்காட்சியில் பிரமோஸ் ரசிகர் பட்டாளம்

சில மாதங்களுக்கு முன்  இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஒரு ராணுவ பத்திரிகையில் ஒரு முன்னாள் ராணுவ தளபதி தன் கட்டுரையில் ‘இந்திய தேசம் ஒரு நாட்டின்மீது வேகம், துல்லியம் மற்றும் சக்திமிக்க அதன் பிரம்மோஸ் ஏவுகணையை ஏவ தயாரானால் அதிலிருந்து தப்பிக்க மூன்றே மூன்று வழிகள்தான் உங்களுக்கு உள்ளன. ஒன்று, இந்திய இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பான பராக் ஏவுகணை உங்களிடம் இருந்தால் அதை வைத்து பிரமோஸை தடுக்க முயற்சிக்கலாம். ஆனால் அதற்கான நேரம் உங்களிடம் குறைவே. அதே நேரம் நீங்கள் எதிரி நாடாக இருப்பதால் அந்த ஏவுகணை உங்களிடம் இருக்க வாப்பில்லை.

இரண்டாவது, இந்திய அரசாங்கத்திடம் உடனடியாக பேசி அவர்கள் சோல்வதை எல்லாம் கேட்கிறோம் என சரணடையலாம். மூன்றாவது, கடைசியான வழி ஒன்று உள்ளது. அது யாதெனில் நீங்கள் நேராக மேல்தளத்திற்கு சென்று இரு கைகளையும் விரித்து இறைவா எங்களை எப்படியாவது காப்பாற்று என வேண்டுங்கள். அவர் ஏதாவது அற்புதம் செய்தால்தான் உண்டு’ என எழுதியுள்ளார். அவ்வளவு புகழ்பெற்ற சக்திவாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை தொடும்போது நமக்குள் ஒரு சிலிர்ப்பு  ஏற்படுவதை மறுக்கமுடியவில்லை என்கிறார் திருவிடந்தை ராணுவக் கண்காட்சியில் பிரமோஸிடம் மனதைப் பறிகொடுத்த சரவணகுமார்.