ராஜதந்திரம்

அமிர்தசரஸ் ‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில்
பாகிஸ்தானின் வாலாட்டம் கச்சிதமாக ஒடுக்கப்பட்டது

சர்வதேச அளவில் இந்தியா பல்வேறு அமைப்புகளில் உறுப்பு நாடாக இருந்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபை, சார்க் அமைப்பு, கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளின் பெயர்களை அடிக்கடி ஊடகங்கள் குறிப்பிடுவதை பார்த்திருப்போம். கடந்த வாரம், திடீரென்று புதியதாக ‘ஆசியாவின் இதயம் ஆப்கனிஸ்தான்’ (Heart Of Asia) என்று ஒரு அமைப்பின் பெயர் அடிபட்டது. அவ்வமைப்பின் ஆண்டு மாநாடு அமிர்தசரஸ் மாநகரில் நடந்து வருவதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டன. இது என்ன புதியதாக ஒரு பெயர்?


ஆப்கனிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் அமைதி மற்றும் வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் 2011ம் வருடம் நவம்பர் மாதம் இஸ்தான்புல்லில் உருவாக்கப்பட்ட அமைப்பே இந்த ‘ஆசியாவின் இதயம்‘ அமைப்பு. அது என்ன ஆசியாவின் இதயம்? ஆப்கானிஸ்தான் நாட்டின் புவியியல் அமைப்புப் படி பார்த்தால், ஒரு புறம் கிழக்கு ஆசியா, மறுபுறம் தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா என்று மூன்று ஆசியப் பகுதிகளின் நாடுகளுக்கிடையில் இதயம் போன்று அமைந்திருப்பதால், அந்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புக்கு இந்தப் பெயர் வந்துள்ளது. பல ஆயிரம் வருடங்களாக, சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்திற்கு, கேந்திரமாக ஆப்கானிஸ்தான் திகழ்ந்து வந்திருப்பதால், வர்த்தகம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு அந்நாட்டை எடுத்துச் செல்ல உறுப்பு நாடுகள் உறுதி அளித்துள்ளன. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட 14 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநகரில் கூடி, தங்களுக்கிடையில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும். இந்த ஆண்டுக்கான மாநாட்டை நடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, சிறப்பான முறையில் மாநாட்டை நடத்தும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி தனது நேரடி மேற்பார்வையில் ஏற்றுக்கொண்டார். கடந்த ஒரு ஆண்டாக, பாகிஸ்தான் நாட்டின் ஒருபுறத்தில் அமைந்துள்ள ஆப்கனிஸ்தானிலும் மறுபுறம் அமைந்துள்ள இந்தியாவிலும் தொடர்ந்து எல்லைதாண்டிய பயங்கரவாதம் தலைவிரித்தாடும் சூழலில், பாகிஸ்தானுக்கு தக்க அறிவுரை கூறும் வகையில் இந்த மாநாடு அமையவேண்டும் என்று தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தது நம் நாடு. அதே சமயம், பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டும் சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், துருக்கி ஆகிய நாடுகள், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் குறித்த தங்களது எண்ணவோட்டத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதில் அதீத கவனம் எடுத்துக்கொண்டது. லஷ்கர்-ஈ-தோயபா மற்றும் ஹக்கானி நெட்வொர்க்கை பாகிஸ்தான் உடனடியாக அழிக்கவேண்டும் என்பதில் உறுப்பு நாடுகள் மூலம் இந்தியா வலியுறுத்தியது இம்மாநாட்டின் சிறப்பம்சம். இதற்காக பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் முஹம்மத் அஷ்ரப் கனியின் முழு ஒத்துழைப்பை நமது நாட்டின் பக்கம் கேட்டுப் பெற்றார். ஆப்கானிஸ்தான் ஏற்கனவே பாகிஸ்தானால் பெரும் தொல்லைகளை சந்திக்கும் இவ்வேளையில், பிரதமர் மோடியின் இம்முயற்சி மிகவும் எளிதாகவே முடிந்துவிட்டது எனலாம். இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், ஒரு நாள் முன்னமே, அமிர்தசரஸ் மாநகர் வந்து ஊடகங்களின் பசிக்கு தீனி போட்டார். அவர் ஏன் அவ்வாறு முன்னமேயே வந்தார்? நமது நாட்டின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மாநாடு தொடங்குவதற்கு முன்னமே சந்தித்து தனது நாட்டின் எண்ணங்களை எடுத்துச் சோல்ல வந்தாரா? அல்லது, மாநாட்டில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இந்தியாவின் முயற்சியை முறியடிக்கும் விதமாக பிற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசுவதுதான் அவரது எண்ணமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தது. இந்தியாவும் அவரது இந்த தேவையற்ற மற்றும் புரோட்டோக்கால் மீறல் நடவடிக்கையை விரும்பவில்லை. விளைவு – அந்த பாகிஸ்தானி தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியே வர போலீஸ் அவருக்கு தடை விதித்தது. அவர் தங்கியிருந்த ஹோட்டலை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்ட போலீஸ், அவர் ஹோட்டலுக்குள்ளேயே தங்க வேண்டும் என்றும் அவர் வெளியில் சென்றால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்றது என்றும் சோல்லிவிட்டது. தான் ஒருநாள் முன்னமே இந்தியா வந்தபோதும், யாரையும் சந்திக்காமல், ஹோட்டலின் வரவேற்பு ஹாலிலேயே நாள்முழுவதும் செலவிட்டார்.
அடுத்த நாள் மாநாட்டிலும், பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாதப் போக்கு குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் ஒருபடி மேலே சென்று, தங்களது நாட்டின் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் அளிப்பதாக உறுதியளித்திருந்த நிதியுதவியை பெற மறுத்துவிட்டது. மாறாக, அப்பணத்தைக் கொண்டு, பாகிஸ்தான் தனது நாட்டில் வளர்ந்துவரும் பயங்கரவாத அமைப்புகளை வேரோடு அழித்துவிட்டால், அதுவே போதுமானது என்று அறிவித்தது, பாகிஸ்தான் நாட்டை கன்னத்தில் அறைவது போலாயிற்று. ஒருபுறம் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும், பிரதமர் மோடி அவர்கள், அண்மையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பாகிஸ்தானின் நவாஸ் ஷெரீப் அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து சர்தாஜ் அஜீஸ் வசம் கேட்டுத் தெரிந்துகொள்ள தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது இனிமையான புன்சிரிப்புடனும் வாஞ்சையான கை குலுக்கல் மூலம், தனது அன்பை தெரிவித்தார் மோடி. இது ஒன்றுதான் பாகிஸ்தானுக்கு ஆறுதல் பரிசு போல் அமைந்தது.
மாநாட்டின் முடிவில், ‘அமிர்தசரஸ் அறிவிப்பு’ வெளியிடப்பட்டது. அதன்படி, உறுப்பு நாடுகள் பிற நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடுவதில்லை; ஒவ்வொரு நாட்டின் இறையாண்மைக்கு பிற நாடு ஊறுவிளைவிக்காமல் இருத்தல்; ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்பு பாராட்டுதல்; உறுப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒருவருக்கொருவர் உதவி செதல், சிறு மற்றும் குறுதொழில் வளர்ச்சி மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல்; ஆப்கானிஸ்தானை மையமாக்கிக் கொண்டு தங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஓங்கச் செதல்; அனைத்துக்கும் மேலாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழித்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கலந்துகொள்ள அமிர்தசரஸ் சென்றிருந்த பிரதமர் மோடி, பொற்கோயிலுக்கு சென்று விசேஷ வழிபாடு நிகழ்த்தியதும் அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு உணவு பரிமாறியதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.