யோகத்தால் யோகம் அடிக்குது!

 

பேட்மின்டன் விளையாட்டு வீரர் கோபிசந்த் கொடிகட்டிப் பறந்த காலத்தில் உடலுக்குத் தீங்கு செங்கும் குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்பதை வைத்து பலருக்கு அவரை நினைவிருக்கும். சென்றவாரம் முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பாரதத்திற்கு வெள்ளிப் பதக்கம் வென்றுகொண்டு வந்த பேட்மின்டன் வீராங்கனை சிந்து, இந்த துரோணாச்சாரியாரிடம் பயிற்சிபெற்றவர் என்பதால் கோபிசந்தின் புகழ் மறுபடியும் கொடிகட்டிப் பறக்கிறது. சாய்னா நெஹ்வால், சிந்து உள்ளிட்ட பல தேசிய, சர்வதேசிய கில்லாடிகளை சரம்சரமாக உருவாக்கிவருகிறார் சாதுவாக தோற்றம் அளிக்கும் கோபிசந்த். இதையெல்லாம் விட சமீபத்தில் ஒரு பேட்டியில் யோகா, சூரியநமஸ்கார் செய்வதன் பலன் பற்றி மிக அழுத்தம் திருத்தமாக கருத்து வெளியிட்டு பலர் கவனத்தை கவர்ந்துள்ளார் இந்த தேசிய கோச். ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி என்று பிரமாதமாக பேசுகிறார்களே அது வேறொன்றும் இல்லை, யோகாவின் மறு அவதாரம்தான்” என்கிறார் கோபிசந்த்.

இவர் போட்டிகளில் கலந்துகொண்ட காலத்தில் தவறாமல் சூரியநமஸ்கார் செய்ததை நன்றியோடு நினைவுகூர்கிறார். சூரியநமஸ்கார் அந்த அளவுக்கு இவருக்கு நன்மை செய்திருக்கிறது. குறிப்பாக இவரது ஆட்ட வாழ்க்கையையே அஸ்தமிக்கச் செய்துவிடும் போலிருந்தது ஒரு முழங்கால் காயம்; அதை மீறி இங்கிலாந்து நாட்டை போட்டியில் வென்ற சாதனை புரியமுடிந்தது என்றால் சூரியநமஸ்காருக்கு ஜே என்கிறார். தொடர்ந்து யோகாவும் செய்துவந்ததை அவர் குறிப்பிடத் தவறவில்லை.

தன்னிடம் பயிற்சிக்கு வருகிற வீரர்கள் வீராங்கனைகளுக்கு யோகா பயிற்சி அளிப்பதில் குறிப்பாக இருப்பதை அவர் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார். உலக அரங்கில் சிகரத்தை தொடுகின்ற விளையாட்டு வீரர்கள் யோகாவின் முக்கியமான சில பயிற்சிகளை உள்வாங்கிக்கொண்டுதான் வெற்றிகொடி கட்ட முடிகிறது என்கிறார் கோபிசந்த். இந்த வகையில் விளையாட்டு சூப்பர் ஸ்டார்கள் விரும்பும் ‘படிப்படியான ரிலாக்சேஷன்’ என்பது யோகநித்ரா அல்லாமல் வேறென்ன என்று கேட்கிறார்.

yogaஉடலை மட்டுமல்ல விளயாட்டு வீரர் வீராங்கனைகளின் மனதையும் திடப்படுத்தி கச்சிதமாக செயல்படச் செய்கிறது என்பதால் யோகா இல்லாமல் ஸ்போர்ட்ஸ் என்பதையே என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை” என்கிறார்.

மிக கடுமையான நிர்பந்தங்கள் முற்றுகையிடும் வேளையில் நிதானம் தவறாமல் ஆடி வெற்றிபெறும் மனோதிடம் தருவது யோகப் பயிற்சி என்பதே கோபிசந்தின் தீர்மானமான கருத்து. எனவேதான் அவர் தன்னிடம் பயிற்சி பெறுகிற விளையாட்டு வீரர்களுக்கு யோகாவின் நுட்பங்களை சொல்லித்தர தவறுவதில்லை.

கோபிசந்த் மட்டுமல்ல மூன்று முறை ஒலிம்பிக்ஸில் சாதனை படைத்த ஹாக்கி வீரர் முகேஷ் குமார் நாளுக்கு நாள் இளம் ஆட்டக்காரர்கள் யோகாவின் நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு மேலும் மேலும் சிறப்பாக ஆட்டத்தில் சோபிப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். குறிப்பாக பேட்மின்டன் ஆட்டத்தில்” என்கிறார் (இவரது மகள் தற்போது சப்ஜூனியர் வீராங்கனை).

முகேஷ் பயிற்சி பெற்ற காலத்தில் தரப்பட்ட யோக விஷயங்களை பலரும் பெரிதாக மதிப்பதில்லை. ஆனால் வரவர தசையை வலுப்படுத்துவதற்கு யோகாவின் அடிப்படையில் தரப்படும் பயிற்சிகள் மேலும் மேலும் பயனுள்ளதாக இருப்பதை வீரர்கள் உணர்ந்துகொண்டு பயன்பெறத் தொடங்கியிருக்கிறார்கள் என்கிறார் முகேஷ். தற்போதெல்லாம் இளம் வீரர்கள் ஆட்டத்தில் மனம் ஒன்றி ஆடுவது யோகாவின் புண்ணியத்தால்தான் என்பது இவர் கருத்து.

மேலும் மேலும் நல்ல பலன் தரும் மூச்சுப் பயிற்சி யோகாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டதுதான். எனவே பல பயிற்சி மையங்களில் சிறப்பான தளவாட ஏற்பாடுகள் இல்லாவிட்டாலும் யோக முறையில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு களத்தில் இறங்க முடிகிறது என்பது பல ஆட்டக்காரர்களின் அனுபவம்.

எனவே எந்த ஆட்டம் ஆனாலும் சரி, அதற்கான கோச் ஒவ்வொருவருமே யோகாவில் நல்ல பரிச்சயம் உள்ளவராக இருக்கவேண்டும் என்ற கருத்து பாரத விளையாட்டு வீரர்கள் மத்தியில் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு ஒலிம்பிக் கோட்டிகளுக்கான பயிற்சி திட்டத்தை பாரத அரசு உருவாக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ள இந்த வேளையில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் யோகா நிச்சயம் அதிகாரிகளின் கவனத்திற்கு வரும் என்று நம்பலாம்.