யானைப்பாகனிடம் ஒரு சிறுவன் இந்த யானை காலில் சங்கிலியில் கட்டியிருக்கிறீர்களே அதை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான். அதற்கு யானைப்பாகன் அதனால் முடியும் ஆனால் போகாது என்றார். ‘ஏன்’ புரியாமல் கேட்டான் சிறுவன். அந்த யானை குட்டியாக இருந்தபோது ஒரு சங்கிலியால் அதனை காலில் கட்டி போடுவார்கள். அந்த குட்டியும் அதை அறுத்துகொண்டு ஓட பார்க்கும். ஆனால் வலு இல்லாததால் நாளடைவில் முயற்சியை கைவிட்டு விடும். ‘நம்மால் முடியாது’ என்ற மனநிலைக்கு வந்து விடும். அது வளர்ந்த பிறகும் கூட தன் வலிமையை உணராமல் ‘தன்னால் முடியாது’ என்ற பழைய மனநிலையிலேயே இருப்பதால் சங்கிலியை அறுக்க முயலாது. சங்கிலிக்கு பதில் ஒரு கயிற்றை கட்டினாலும் அதனை அறுக்காது. கால் கட்டப்பட்டால் அங்கேயே நிற்க வேண்டும் என்ற மனநிலைக்கு அது பழகிவிட்டது. இந்த உதாரணம் யானைக்கு மட்டுமல்ல, நமக்கும் பொருந்தும். நாமும் நம் வாழ்க்கையில் எத்தனையோ முயற்சிகளை எடுத்திருப்போம். அதில் தோல்விகள் கிடைத்தால் அவ்வளவு தான், இனி நம்மால் முடியாது என நம்பிக்கையை இழந்திடுவோம். அதனால்தான் நாம் பல இடங்களில் வெற்றியை அடைவதில்லை. அந்த வகையில் நாமும் அந்த யானையை போலத்தான். என்னால் முடியும். இதை மீண்டும் முயற்சிப்பேன். இதை அடையாமல் நான் ஓயமாட்டேன் என்ற இடை விடாத முயற்சி, நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி வெற்றிகளோடு பயணிக்க வைக்கும்.
ஜெயிக்க, தற்போது நமக்கு தேவை ஒரு ஆழமான,அழுத்தமான நம்பிக்கை.