நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பங்களின் நலனை முன்னிறுத்தும் அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் பற்றி அறிவோம்…
முன்னாள் ராணுவ வீரர்களின் பதவி, படைப்பிரிவு பாகுபாடின்றி ‘அரசியல் சார்பற்ற மேடையில்’ ஒன்றிணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது, அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் (ABPSSP) அமைப்பு. நமது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தேசம் மற்றும் சமூகத்தின் நலனை முன்னிறுத்தியும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
முன்னாள் ராணுவத்தினரிடம் இயல்பாகவே உள்ள ஒழுக்கம், கூட்டு நேர்மறை ஆற்றல், அர்ப்பணிப்பு, கடமையுணர்வு, திறமை, அனுபவம் மற்றும் உன்னதமான தேசபக்தி ஆகியவற்றைச் சரியான வழியில் பயன்படுத்துவதே நோக்கமாகும். 1992 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ‘பூர்வ சைனிக் சேவா பரிஷத்’ என்ற கருத்துருவம் உருவாக்கப்பட்டது. முதல் அகிலபாரத மாநாடு, 1995 நவம்பரில் கூட்டப்பட்டது. பின்னர், 14 செப்டம்பர் 1999 அன்று டெல்லியில், அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டது.
செயல்பாடுகள்
முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் தங்களது கல்லூரிப் படிப்பைத் தொடரவும், தகுதியுள்ள பிள்ளைகள் தொழில்முறை/தொழில்நுட்பக் கல்வியைப் பெறவும் இந்த அறக்கட்டளை நிதியுதவி வழங்குகிறது. இதற்காக, தகுதியுடைய பிள்ளைகளுக்குப் பல்வேறு அளவிலான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதில் போர் / ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கும், அதன்பின்னர் காலமான முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வறுமையில் வாடும் முன்னாள் ராணுவத்தினர், அவர்களின் விதவைகள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்குத் தேவைக்கேற்ப இந்த அறக்கட்டளை நிதியுதவி வழங்குகிறது.
அறக்கட்டளையின் நோக்கங்கள்
பணியில் இருக்கும்போது காலமான ராணுவ வீரர்களின் குழந்தைகள் தங்களது கல்வியைத் தொடர நிதியுதவி வழங்குதல் மற்றும் அவர்களுக்குப் பொருத்தமான சேவை வழங்குநராகச் செயல்படுதல்.
• பணியில் இருக்கும்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மகள்களின் திருமணத்தை நடத்துவதற்கு நிதியுதவி வழங்குதல்.
• ராணுவ வீரர்களின் விதவைகள், மகள்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் மகன்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தந்து, அவர்களின் மறுவாழ்விற்கு உதவுதல்.
• அனைத்துப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் தகுதியுடைய விதவைகள், அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு, மத்திய – மாநில அரசுகளாலும், இதர அரசு சாரா அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்பட்ட உதவிகள், உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்தல்.
• பணியில் இருக்கும் போதோ அல்லது மருத்துவக் காரணங்களால் பணியிலிருந்து விடுவிக்கப்படும் போதோ மரணமடையும் அல்லது மாற்றுத் திறனாளியாகும் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மறுவாழ்வு பெற நிதியுதவி வழங்குதல்.
• மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் விதவைகள், அவர்களின் குழந்தைகள் அல்லது அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் நலனுக்காக, இந்த அறக்கட்டளையின் குறிப்பிடப்பட்ட நோக்கங்களைப் பரப்புவதற்குத் தேவையான மற்றும் பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல்.
• மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை மேம்படுத்துவதற்காக மாநாடுகள், கருத்தரங்குகள், ஆய்வுப் படிப்புகள், பயிற்சித் திட்டங்கள், சொற்பொழிவுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் போன்ற செயல்பாடுகளைத் திட்டமிட்டு நடத்துதல்.
• மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களை மேலும் முன்னெடுத்துச் செல்லும் திட்டங்களை வகுப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் பிற பொருத்தமான முகமைகளுடன் இணைந்து செயல்படுதல்; மேலும் அந்த நோக்கத்திற்காக வழங்கப்படும் மானியங்கள், நிதிகள் மற்றும் நன்கொடைகளை ஏற்றுக்கொள்தல்.
வருடாந்திர நிகழ்வுகள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி (ஜனவரி 23) :- நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 அன்று அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத்தின், மாநில மற்றும் மண்டல அமைப்புகளால் இது கொண்டாடப்படுகிறது. இளைய தலைமுறையினரிடையே அவரது வாழ்க்கை மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஆசாத் ஹிந்த் ஃபவுஜ் திவஸ் (ஏப்ரல் 14): – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான “ஆசாத் ஹிந்த் ஃபவுஜ்” (இந்திய தேசிய ராணுவம் – INA), பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பாரதத்தை விட்டு வெளியேறுவதை விரைவு படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது. அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று ‘ஆசாத் ஹிந்த் ஃபவுஜ் திவஸ்’ கொண்டாடுகிறது. ஏனெனில், 1944 ஆம் ஆண்டின் இதே நாளில், அன்றைய அஸ்ஸாம் மாகாணத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த பாரதத்தின் ஒரு பகுதியை மீட்டெடுத்த பிறகு, மொய்ராங்கில் (மணிப்பூர்) உள்ள ஐ.என்.ஏ. தலைமையகத்தில், இந்திய தேசிய ராணுவம் நமது மூவர்ணக் கொடியை ஏற்றியது. நமது சுதந்திரப் போராட்டத்தில், ஐ.என்.ஏ. ஆற்றிய முக்கியப் பங்கை நாட்டின் இளைஞர்களுக்கு உணர்த்தவும், தேசத்திற்காகத் தியாகம் செய்யும் உணர்வை ஊட்டவும், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
கார்கில் யாத்திரை: – ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில், அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் அமைப்பு, ஸ்ரீநகரிலிருந்து கார்கில் (லடாக்) வரை ஒரு வார கால யாத்திரையை மேற்கொள்கிறது. நமது முப்படைகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் ஸ்ரீநகர் – த்ராஸ் – கார்கில் ஆகிய இடங்களுக்கு சென்று, 1947 முதல் நடைபெற்ற பல்வேறு போர்களில், குறிப்பாக 1971 பாரத -பாகிஸ்தான் போர் மற்றும் 1999 கார்கில் போரில் வீரமரணம் அடைந்த நமது தியாகிகளுக்கு, அங்குள்ள பல்வேறு போர் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.
மேலும், முன்னாள் ராணுவத்தினர் இந்த யாத்திரையின் வழியில் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி, அவர்களிடையே கூட்டுப் பணி உணர்வை வளர்க்கிறார்கள். மிகவும் சவாலான மற்றும் கடினமான சூழலில், நமது ராணுவ வீரர்கள் தங்களது கடமைகளை மிக உயர்ந்த அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துரைப்பதன் மூலம், அவர்களுக்கு பெருமையும், மரியாதையும் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. இது பரஸ்பர மரியாதை மற்றும் பாராட்டுதலின் மூலம், முன்னாள் ராணுவத்தினருக்கும், தற்போது பணியில் இருக்கும் வீரர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
விஜய் திவஸ் (டிசம்பர் 16)-: 1971ல் பாரத – பாகிஸ்தான் போரின் போது, நமது ஆயுதப் படைகள் பெற்ற மகத்தான வெற்றியை நினைவுகூரும் வகையில் ‘விஜய் திவஸ்’ கொண்டாடப்படுகிறது. 1971 டிசம்பர் 16 அன்று தான், ராணுவம் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் பாகிஸ்தான் ராணுவம் நம்மிடம் சரணடைந்ததன் விளைவாக, கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) சுமார் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இந்த வெற்றியை 1996ல் கொண்டாடும் முயற்சியை, அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் அமைப்பு எடுத்தது. அப்போது பாரதக் குடியரசுத் தலைவர், இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதியில், நமது பாதுகாப்புப் படையினரின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தேசப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நமது பாதுகாப்புப் படைகளைப் பற்றிய அறிவை வழங்குவதும், நாட்டின் குடிமக்களின் மனதில் பெருமிதத்தை ஏற்படுத்துவதும் இந்நாளைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும்.
https://abpssp.in/ என்ற இணையதளத்திலிருந்து எடுத்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது இந்தக் கட்டுரை