ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே கைது செய்யப்பட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டியது. அவரை தேடி சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் இல்லாததால் நோட்டீஸை வழங்கி விட்டு திரும்பியதாக தகவல் வெளியானது. இதனால் ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் எனும் விவரம் தெரியாமல் இருந்தது.
ந்தநிலையில் சிதம்பரம் இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும், வழக்கறிஞர்களும் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.
ஆனால் அதற்குள்ளாக அவர் தனது டெல்லி இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை பின் தொடர்ந்து சிபிஐ , அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்றனர். சிறிது நேரத்தில் சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
இதனிடையே சிபிஐ அதிகாரிகள் டெல்லி வீட்டுக்கு வந்தனர். ஆனால் காவலாளி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்றனர்.அவர்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உள்ளே சென்றனர். 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குடியிருப்பின் பின்புறம், முன்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர். பின்னர் அவரை கைது செய்வதற்காக கார் கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் வீட்டின் கேட் கதவு திறக்கப்பட்டு கார் உள்ளே கொண்டு வரப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே சிபிஐ அதிகாரிகளால் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.