மனுஸ்மிருதியில் பெண்கள்

மனுஸ்மிருதியில் பெண்கள் தொடர்பாக மதிப்பிடுவதற்கு முன், இந்த நூலின் உண்மையான நிலையை புரிந்துகொள்ள வேண்டும். வேத மற்றும் உபநிஷத் காலங்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உருவானது மனுஸ்மிருதி. இந்தியா முழுவதும் அனைவருக்கும் கட்டாயமாகப் பொருந்திய ஒரே சட்டமாக மனுஸ்மிருதி, ஒரு காலத்திலும் இருந்தது கிடையாது.
18ஆம் நூற்றாண்டின் இறுதியில், பிரிட்டிஷ் நிர்வாகம் நீதிமன்றப் பயன்பாட்டிற்காக இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதன் சில விதிகளை சட்ட வடிவில் பயன்படுத்தியது.ஆண்களின் பொறுப்பும், பாதுகாப்புக் கடமையும் இன்றைய விவாதங்களில் பெண்களின் சார்புநிலையைப் பற்றி அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஒரு கருத்து
“சிறுவயதில் தந்தை அவளைப்
பாதுகாக்க வேண்டும்; இளமையில் கணவன் அவளைப் பாதுகாக்க வேண்டும்; முதுமையில் மகன்கள் அவளைப் பாதுகாக்க வேண்டும்; பெண் பாதுகாப்பின்றி விடப்படக் கூடாது.” ||மனு 9.3||
இந்த ஸ்லோகத்தை அடுத்துள்ள ஸ்லோகத்துடன் சேர்த்துப் படிக்க வேண்டும்.
“தகுந்த காலத்தில் மகளுக்குத்
திருமணம் செய்து வைக்காத தந்தை குற்றஞ்சாட்டப்பட வேண்டும். மனைவியைப் புறக்கணிக்கும் கணவனும் குற்றஞ்சாட்டப்பட வேண்டும். கணவன் இறந்தபின், தாயைப் பாதுகாக்காத மகனும் குற்றஞ்சாட்டப்பட
வேண்டும்.” ||மனு 9.4 ||
இந்த இரண்டு ஸ்லோகங்களை ஒன்றாகப் பார்க்கும்போது, பெண்ணைப் பாதுகாப்பது ஆண்களின் கட்டாயமான சமூகப் பொறுப்பாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒரு பெண் ஆதரவின்றி, கைவிடப்பட்ட நிலையில் அல்லது பாதுகாப்பற்ற நிலையில் இருக்கக்கூடாது என்பதே இதன் அடிப்படை நோக்கமாக இருந்தது.
மனுஸ்மிருதி பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்திலும், பொருளாதாரத்திலும் முக்கியப் பொறுப்புகளை வழங்குகிறது. குறிப்பாக, குடும்பத்தின் வரவு செலவுகளையும், சொத்துகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைக்க வேண்டும், வருவாயைச் சேமிப்பதிலும், செலவுகளை நிர்வகிப்பதிலும் அவளை ஈடுபடுத்த வேண்டும். தூய்மை, அறச்செயல்கள், உணவு தயாரித்தல், குடும்பப் பொருட்களைப் பராமரித்தல் ஆகியவற்றையும் அவளிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறது.
இந்தப் பின்னணியில், ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்கள் “சிறுவயதில் தந்தை அவளைப் பாதுகாக்க வேண்டும்” என்ற வரியை மட்டும் மேற்கோள் காட்டி, மனுஸ்மிருதி பெண்களை முழுமையாக அடிமைப்படுத்துகிறது என்று கூறுவது முழுமையான வாசிப்பு அல்ல. மேலே குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களை புறக்கணித்தால், சிக்கலான ஒரு சமூக அமைப்பை ஒரே கோணத்தில் மட்டும் விளக்கும் அறியாமை நிலை ஏற்படும். பிற முக்கிய உலக மதங்களிலும், சமூகங்களிலும், பெண்களுக்கு இருந்த சட்ட மற்றும்
குடும்ப நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
நாடு சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளுக்குப் பின்னரும் நமக்கென தனி அரசியல் சாசன அமைப்பு ஏற்படுத்திய பின்னரும் என்றோ வழக்கத்தில் இருந்த மனுஸ்ம்ருதி குறித்து இன்னமும் புலம்புவது ஏன் என்பது மட்டும் புரியவில்லை.

கட்டுரையாளர் : ராகவேந்திரன்