காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 5-ந் தேதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வகை செய்யும் மசோதாவையும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதாவையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 2 ஆண்டுகளில் கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுப்பயணம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ‘கவனித்தல், கற்றல், வழிநடத்துதல்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மனதார வரவேற்கிறேன்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ‘மிஷன் காஷ்மீர் ஆபரேஷன்’ நடவடிக்கையை (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து) நான் மனதார வரவேற்கிறேன். இதனை நீங்கள் (அமித்ஷா) கையாண்ட விதத்துக்கு நான் தலை வணங்குகிறேன். குறிப்பாக மக்களவையில் உங்களுடைய பேச்சு அருமையாக இருந்தது. இப்போது மக்களுக்கு அமித்ஷா யார் என்று தெரிகிறது. அதனை நினைத்து நான் சந்தோஷம் அடைகிறேன்.
மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள். யார் கிருஷ்ணன்?, யார் அர்ஜுனன்? என்று எங்களுக்கு தெரியாது. அது அவர்களுக்குத்தான் தெரியும்.
இவ்வாறு ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார்.