மகான்களின் வாழ்வில்

                                                                                  சாமி நாகப்பன்

சுதந்திரப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த முதல் சத்தியாகிரகப் போராளி, மயிலாடுதுறை சாமி நாகப்பன் படையாச்சியார். மயிலாடுதுறை மாவட்டம், மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில், 1891-ம் ஆண்டு ஜுலை மாதம் 6-ம் தேதி தந்தையார் சாமிக்கண்ணு, தாயார் கனகம்பாள் அம்மையார் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். தந்தையார் மயிலாடுதுறை செங்கமேட்டு தெருவில் வசித்து வந்தார். வேலைத்தேடி தனது 14-ம் வயதில், 1905-ம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்ட `ராயல் கிளாட்டோ’ என்ற கப்பல் மூலம் திருவாருரைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவருடன் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். பாலசுந்தரம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் ஒரு ஆங்கிலேயரிடம் வேலை செய்தார். இவர் வேலை செய்து வந்த ஆங்கிலேயர் வீட்டுக்கு அருகில் வேறு ஒரு ஆங்கிலேயர் வீட்டில் தங்கி, பலருக்கு ‘தற்காப்பு கலை’ பயிற்சி அளித்து வந்தார். இதனால் பதக்கம் பல பெற்று மதிப்புடன் திகழ்ந்தார் நாகப்பன்.
1893-ல் காந்தி போர்பந்தரைச் சேர்ந்த மேமன் கம்பெனி வழக்கு தொடர்பாக தென் ஆப்பிரிக்கா சென்று வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார். பின்பு பாரத தொழிலாளர்கள் ஆப்பிரிக்காவில் வேலை செய்திட மூன்று பவுண்டு வரி செலுத்த வேண்டுமென்ற `எசியாட்’ எனும் பதிவு சட்டம் கொண்டு வந்து, பாரதிய தொழிலாளர்களை ஆங்கிலேயர் அரசு துன்புறுத்தி வந்தது. இச்சட்டத்தை எதிர்த்து, காந்தி சத்தியாகிரகப் போராட்டம் நடத்திட ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார். இச்சமயத்தில் கருத்து வேறுபாடு காரணமாக நாகப்பன் நண்பரான பாலசுந்தரத்தை அவரது ஆங்கிலேய முதலாளி தாக்கி, அவரது இரண்டு பற்களை உடைத்துவிட்டார். அருகில் உள்ள வீட்டில் வேலை செய்து வந்த நாகப்பன் கேள்விபட்டு உடன் பாலசுந்தரத்தை காந்தியிடம் அழைத்து சென்றார். காந்தி அந்த முரட்டு ஆங்கிலேயன் மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக நாகப்பன் இருந்து, வழக்கை வெற்றி பெற காந்திக்கு உதவினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெற்றி பெற்ற முதல் வழக்கு, தென்னாப்பிரிக்காவில் பாரதிய தொழிலாளர்களிடம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
காந்தி நாகப்பனைக் கட்டித் தழுவி ஆனந்த மேலிட்டால் “உலத்துவதற்கு ஏற்பட்ட தீக்குச்சியை போல் உத்வேகம்” அளித்தார். இதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த பாரத தொழிலாளர்களுக்கு தூண்டுதலாக அமைந்தது. ஒன்று கூடி போராட்டம் செய்திட துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார் நாகப்பன். 1906-ஆம் ஆண்டு காந்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின் பொழுது பாரதத்தில் லார்டு எல்ஜின் வைசியராக இருந்தார். இவர் இப்போராட்டம் கண்டு அஞ்சினார். எனவே, 25 பவுண்டு வரி விதிப்பிலிருந்து 3 பவுண்டாக குறைத்தார். பாரத விடுதலை எழுச்சி சூடுபிடிக்க தொடங்கியது. இந்த மாபெரும் போராட்டதிற்கு ஆணிவேராக செயல்பட்ட நாகப்பன், ஆங்கிலேயர்களின் கடும் கோபத்திற்கு ஆளானார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வார்டன்களால் கடுமையாக தாக்கப்பட்டார். உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் நாகப்பன், 1909-ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி இரவு உயிர் நீத்தார். 1914ம் ஆண்டு காந்தி `இந்து சேவா சமாஜ சங்கம்’ சார்பாக தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ் பர்க் நகரில் சாமி நாகப்பனுக்கு நினைவு கல் வெட்டு திறந்து வைத்தார். ஜோகன்னஸ் பர்க்கில் உள்ள ஃபெரிரா மற்றும் மார்ஷல் தெருக்களின் மூலையில் இந்து சேவா சமாஜ சங்கத்தால் கல்லறை கட்டப்பட்டது.