மகான்களின் வாழ்வில்

மாதா அமிர்தானந்தமயி தேவி

தனது பக்தர்களால் அன்போடு “அம்மா” என்று அழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி தேவி உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர் மற்றும் மனிதாபிமான ஆர்வலர்.
மாதா அமிர்தானந்தமயி தேவி, 1953ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பறயகடவு என்ற சிறிய கடலோர கிராமத்தில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த சுகுனாநந்தன், தமயந்தி தம்பதியினருக்கு மகளாக ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு ஒன்பது வயது ஆகும்போது, தனது வீட்டு வேலைகளை செய்யவும் இளைய சகோதரிகளை கவனித்துக் கொள்ளவும், மூன்றாம் வகுப்பு தொடக்கக் கல்வியை பாதியிலேயே நிறுத்த நேர்ந்தது.
மாதா அமிர்தானந்தமயி, தன் பக்தர்களை ஒரு தாயைப்போல கட்டி அரவனைத்து ஆறுதல் கூறி தரிசனம் தருகிறார். அவ்வாறு அரவனைக்கும் போது, தன் ஆன்மீக ஆற்றலின் ஒரு துளியைப் பக்தர்கள் பெறுவதாகவும், அதை அவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார். எனவே அம்மாவின் பக்தர்களும், சீடர்களும் இவரை அரவனைக்கும் அன்னை (Hugging Saint) என அழைக்கின்றனர். அதிகமான உலக நாடுகளுக்கு விஜயம் செய்தவர். அமிர்தானந்தமயி ஆற்றிவருகின்ற சமூக முன்னேற்றப்பணி, உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று காட்டுகின்ற வகையில், உலக சமயத் தலைவர்கள் பலரோடு இணைந்து அடிமைத்தன ஒழிப்பு அறிக்கையில் கையெழுத்திட்டார். சமூகத்தில் வேரோட்டமான மாற்றம் கொணர்வதற்காக இவ்வாறு கத்தோலிக்க, கீழை மரபுவழி, ஆங்கிலிக்க சபை, யூத, சுன்னி மற்றும் ஷியா, ஹிந்து, புத்த சமயப் பிரதிநிதிகளும் தலைவர்களும் ஒன்றுகூடி வந்து கோரிக்கை விடுப்பது, இதுவே முதன்முறை என்று அமைப்பாளர் ஆண்ட்ரூ ஃபோரஸ்டு கூறினார்.
அம்மாவின் வாழ்க்கையை நாம் உற்று நோக்கினால், நாம் காண்பது இதுதான்—தன் ஒவ்வொரு எண்ணத்தையும், சொல்லையும், செயலையும் பிறரின் நன்மைக்காக அர்ப்பணித்த ஒருவர், கொடுப்பதே அதன் சாராம்சம். வீடற்றவர்கள் தங்குமிடம் கேட்டு அழுது வரும்போது, அம்மா அவர்களுக்கு வீடு கொடுக்கும்போது, நாம் அவரை ‘மனிதாபிமானி’ என்று அழைக்கிறோம். துயருற்றவர்கள் மன ஆறுதலுக்காக அழுது வரும்போது, அவர் அவர்களுக்கு அன்பு கொடுக்கும்போது, நாம் அவரை ‘தாய்’ என்று அழைக்கிறோம். ஆன்மீக ஞானத்திற்காக தாகம் கொண்டவர்கள் உண்மையாகத் தேடி வரும்போது, அவர் அவர்களுக்கு ஞானம் கொடுக்கும்போது, நாம் அவரை ‘குரு’ என்று அழைக்கிறோம். தன்னலமின்றி அனைத்துப் படைப்புகளுக்கும் சேவை செய்யும், மற்றவர்களைத் தன்னுடைய நீட்சியாக அறியும் இந்த மனப்பான்மையைத்தான் அம்மா ‘விஸ்வ மாத்ருத்வம்’ —அதாவது உலகளாவிய தாய்மை—என்று குறிப்பிடுகிறார். மனித வாழ்வின் இந்த உச்சத்தைத்தான் அம்மா தனது வாழ்க்கை, போதனைகள் மற்றும் தரிசனம் ஆகியவற்றின் மூலம் உலகை விழித்தெழ செய்ய முயற்சிக்கிறார்.