”போர்க்களத்தில் கடைசி வரை போராட வேண்டும் என்ற மனோநிலைதான் இருந்தது”

தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், பாரத ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த 34 ராஷ்ட்ரிய ரைபில்ஸ் படையில் பணியாற்றியவர். தனது அசாதாரண வீரம் மற்றும் தியாகத்தால், நாட்டின் இரண்டாவது உயரிய வீர விருதான கீர்த்தி சக்ராவைப் பெற்று தமிழகத்திற்கும், நமது தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், 2024 டிசம்பர் 19 அன்று, பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக 34 ராஷ்ட்ரிய ரைபில்ஸ் வீரர்கள் அந்தப் பகுதியை நோக்கி விரைந்து சென்று நடத்திய தேடுதல் வேட்டையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

மீனாட்சி சுந்தரம் தனது சக வீரர்களுடன் முன்னேறி, தாக்குதல் நடத்தினார். அப்போது பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகத்திலும், வலது தோள்பட்டையிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தப்போக்கு, கொடிய வலி, உயிருக்கு ஆபத்து என எல்லாம் இருந்தும் அவர் பின்வாங்காமல், மன உறுதியுடன் தொடர்ந்து சண்டையிட்டு, தீவிரவாதியைச் சுட்டு வீழ்த்தினார். காயமடைந்த சக வீரர்களையும் பாதுகாப்பாக மீட்டு, பணியை வெற்றிகரமாக முடித்தார். அவரது இந்த அசாதாரண துணிச்சலும், தேசப்பற்றும் பாராட்டும் விதமாக வீரதீரச் செயலுக்கான “கீர்த்தி சக்ரா விருது”, 2026 ஜூன் மாதம் டெல்லியில் குடியரசுத்
தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் மீனாட்சி சுந்தரம் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் அழைத்து ரூ.48 லட்சம் காசோலை வழங்கிப் பாராட்டினார். முகத்தில் குண்டு பாய்ந்த நிலையிலும், தாய்நாட்டுக்காகப் போராடிய மீனாட்சி சுந்தரம், பல்வேறு பணிகளுக்கு இடையே, நமது விஜயபாரதம் இதழுக்காக 2026 ஜூலை 1ல் அளித்த பிரத்யேகமான நேர்காணல்:

உங்களது பெயர், படிப்பு பற்றி கூற முடியுமா?

எனது பெயர் மீனாட்சி சுந்தரம். நான் பி.காம் வரை படித்துள்ளேன்.

ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்பது உங்கள் ஆசையா? அல்லது நிர்பந்தமா?

நிர்பந்தம் இல்லை. எனக்குசிறுவயதில் இருந்தே ராணுவத்தில் பணி புரிய வேண்டும் என்பது, எனது விருப்பமாக இருந்தது. 5 வயதில் இருந்தே, அந்த விருப்பம் இருந்தது.

ராணுவத்தில் சேர யாராவது முன்னுதாரணமாக இருந்தார்களா?

எனது ஊரில் இருந்த உறவினர்கள் மேக்ஸிமம் ராணுவத்திற்கு சென்றதை பார்த்து எனக்கு அந்த விருப்பம்
ஏற்பட்டது.

மைனஸ் டிகிரியில் இருந்ததாக ஒரு பேட்டியில் கூறினீர்கள், அது எந்த அளவுக்கு இருந்தது. எவ்வளவு கஷ்டம் இருந்தது ?

‘கஷ்டம்’ நரகம் மாதிரி தான் இருந்தது. நான் பணியில் இருந்த போது பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தேன். சீனா, பாகிஸ்தான் மற்றும் நடுவில் நமது பார்டர் அங்கு மைனஸ் 35 டிகிரியில் இருந்து இருக்கிறேன். அங்கு கஷ்டம் என்பது நரகம் மாதிரி இருக்கும். 35 ஆயிரம் அடி உயரம், 45 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து இருக்கிறேன். நாட்டுக்காக இருந்துதான் ஆக வேண்டும்.

கடினமான சூழ்நிலையில் பணிபுரியும் போது உங்களுக்கு தன்னம்பிக்கை தரும் விஷயம் என்னது?

நாங்கள் 10, 15 பேர் ஒன்றாக பணிபுரிவோம் அவர்கள் தரும் மோட்டிவேஷன், இவரிடம் நாம் பயிற்சி பெற்றிருக்கிறோம் என்பதுதான். அங்கு உடல்ரீதியான, மன ரீதியான கடுமையான பயிற்சிகள் வழங்கப்படும். அங்கு சப்போர்ட்டாக வீரர்கள் இருப்பார்கள். நான் சொல்வதை அவர்கள் கேட்பார்கள், அவர்கள் சொல்வதை நான் கேட்டுக் கொள்வேன்.

மைனஸ் டிகிரியில் குளிர் இருக்கும் போது, உங்களுடைய உணவுப் பழக்கவழக்கம் பற்றி கூற முடியுமா?

அங்கு உணவு எல்லாம் ஹெலிகாப்டரில் இருந்து போடுவார்கள். பாதாம், பிஸ்தா, சாக்லேட் மற்றும் சூடான உணவுப் பொருட்களை எங்களுக்கு வழங்குவார்கள்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடந்தபோது நீங்கள் அங்கு பணியில் இருந்தீர்களா?

நான் அங்கு பணியில் இல்லை, அதற்கு முன்பு அங்கு பணியில் இருந்திருக்கிறேன்.

ஆப்ரேஷன் சிந்தூர் ஏற்பட்ட காலத்தில் அங்கு சூழ்நிலை எப்படி இருந்தது என அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்டீர்களா?

இல்லை நான் சிகிச்சையில் இருந்தேன்.

மத்திய அரசாங்கம் எதிரி நாட்டுக்கு எதிராகவும், தீவிரவாதிகளுக்கு எதிராகவும் எப்படி செயல்படுகிறது?

பாரா மிலிட்டரி, ஆர்மி கண்ட்ரோலில் இப்பொழுது முழு கட்டுப்பாடும் வந்துவிட்டது. அவர்களுக்கு முழுசுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதல் என்பது பெரும்பாலும் ஊடகங்களில் செய்தியாக வருவதில்லை. வருடத்திற்கு இரண்டோ, மூன்றோதான் வரும். எல்லாம் தற்பொழுது முடிந்து விட்டது.

பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் நமது அண்டை நாடுகளுடன் பிரச்சினை இருக்கிறது அதை நாம் எப்படி கையாள வேண்டும்?

இந்தியாவும் சரி, இந்திய ராணுவமும் சரி வாலண்ட்ரியாக சென்று பிரச்சினையை வளர்க்காது. பக்கத்தில் இருக்கும் சின்ன சின்ன நாடுகளுக்கு எல்லாம் நாம் தொந்தரவு கொடுக்காமல்தான் இருக்கிறோம். தொந்தரவு கொடுத்தால் இப்பொழுது நாம் அவர்களை விடுவதில்லை.

நீங்கள் ராணுவத்தில் செய்த சாகசம் சொல்ல முடியுமா ?

ஆப்ரேஷன் (போர்) நடக்கும் சமயங்களில், உடலில் புல்லட் பட்ட போதும், அந்த இடத்தை விட்டு நகராமல் தொடர்ந்து நின்று சண்டை போட்டு இருக்கிறேன். அங்கிருந்து கோழையாக
தப்பி விடக்கூடாது என்று கடைசி வரை அங்கு நின்று சண்டை போட்டு இருக்கிறேன்.

ராணுவத்தில் இருக்கும்போது உங்களது தினசரி வாழ்க்கை முறை எப்படி என்று கூற முடியுமா?
ஆர்மி என்பது ஒரு தனி உலகம். முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். விளையாட்டு, உடற்பயிற்சி என்று இருக்கும்.

காயம் ஏற்பட்டபோது நீங்கள் முன்னேறி சென்று சண்டை போட்ட அனுபவங்களை பற்றி கூற முடியுமா?

நான் ஸ்பெஷல் டீமில் தான் இருந்தேன். ஆர்.ஆரில் நான் இருந்தேன். ஆர்.ஆர். என்பது தீவிரவாதிகளை கண்ட்ரோல் செய்வதுதான். நான் மட்டுமல்ல அங்குள்ள அனைவரும் இந்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருப்போம். ஆனால், வாய்ப்பு கிடைப்பதுதான் மிகவும் கஷ்டம்.

ஆர்.ஆர்.யை நீங்கள் தேர்வு செய்தீர்களா? அல்லது அதுவாக வாய்ப்பு வந்ததா ?

இல்லை, நானாக தான் வாலண்டரியாக தேர்வு செய்தேன். அங்கு இன்ட்ரஸ்ட்டா இருக்கும். ரூல்ஸ் & ரெகுலேஷன் எதுவும் பார்க்காமல், அங்கு தீவிரவாதிகளுடன் ஆபரேஷன் செய்வோம். அங்கு கண்ட்ரோல் எதுவும் இருக்காது. ராணுவம் என்றால் ஒரு கேம்புக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அங்கு இருக்காது. பெரும்பாலும் சுற்றிக் கொண்டே இருப்போம்.

 நாம் இந்த நாட்டில் பிறந்ததற்கு அர்த்தம் உள்ளது என என்றாவது நீங்கள் நினைத்தது உண்டா?

நம்ம நாட்டில் பிறப்பதே ஒரு அதிசயம். இங்கு பிறந்ததே கடவுள் கொடுத்த வரம்தான்.

 மத்திய அரசாங்கம் உங்களுக்கு விருது அறிவித்தபோது அந்த உணர்வுகள் எப்படி இருந்தது.

ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அடிபட்டு நான் மருத்துவமனையில் இருந்தபோது யாருக்கும் அது தெரியவில்லை. அதற்கான அங்கீகாரம் கொடுத்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஊர் மக்களுக்கும், உறவினர்களுக்கும் மிகவும் பெருமையாக இருந்து. எனக்கு மட்டும் அல்ல அடிபட்டவர்களுக்கும், ‘அச்சீவ்மென்ட்’ செய்தவர்களுக்கும் இதுபோல் விருதுகள் கொடுத்தால் வருங்கால இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.

தொடரும்…
பேட்டி எடுத்தவர்: ரஞ்சித்