பெங்களூரில் நகைக்கடை நடத்தி வாடிக்கையாளர்களிடம் ரூ.2,500 கோடி மோசடி செய்த முகமது மன்சூர் கான் நேற்று காலை துபாயில் இருந்து டெல்லி திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நகைக்கடை நடத்தி வந்தவர் முகமது மன்சூர் கான். இவர், தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவித்தார். இதனை நம்பி பலர் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். திடீரென அவரது நிறுவனம் மூடப்பட்டது. முகமது மன்சூர் கான் மீது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். விசாரணையில், மன்சூர் கான் ரூ.2,500 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரும் துபாய்க்கு தப்பிச் சென்றார்.
முகமது மன்சூர் கானுக்கு எதிராக கர்நாடக போலீஸாரும் அமலாக்கப் பிரிவினரும் வழக்கு பதிவு செய்தனர். மன்சூர் கானிடம் லஞ்சம் வாங்கியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை துபாயில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த முகமது மன்சூர் கானை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். துபாயில் பதுங்கியிருந்த மன்சூர் கானை இந்தியா வந்து சரணடையும்படி தாங்கள்தான் வலியுறுத்தியதாக கர்நாடகா சிறப்பு விசாரணைக் குழு போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மன்சூர் கான் ஏற்கெனவே வெளியிட்ட ஆடியோ செய்தியில் கர்நாடகா முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஷன் பெய்க் தன்னிடம் ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக கூறியிருந்தார். இது தொடர்பாக ரோஷன் பெய்க்கை கடந்த திங்கட்கிழமை கைது செய்த கர்நாடக போலீஸார் 14 மணி நேர விசாரணைக் குப்பின் கடந்த செவ்வாய்கிழமை விடுவித்தனர். விசாரணைக்கு ஒத்துழைப்பாக ரோஷன் பெய்க் பின்னணியில் துபாயில் இருந்த மன்சூர் கான் இந்தியா வந்து கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.