திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, தெற்கு சேர்ப்பட்டி கிராமத்தில் அன்னை ஃபார்ம்ஸ் (Annai Farms) என்ற இயற்கை வழி வேளாண் பண்ணையின் இயற்கை விவசாயி கண்ணன் சுதேசி ஆர்வலர். செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் வடிவில் ரசாயனப் பொருட்களை விவசாயத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதால், மனித சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மையை விட, தீமையே அதிகம் என்று சொல்வதுடன் நின்றுவிடாமல், படித்த இன்றைய இளம் தலைமுறையினரும், பல நாடுகளும் இயற்கை விவசாயத்தை நோக்கி நகரும் அண்மைக்கால ஆரோக்கியமான சூழலையும் அவர்கள் இயற்கை விவசாயத்தில் பல்வேறு சாதனைகள் படைத்து வருவதையும் நம்மிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார். அவரது அனுபவம் இதோ:
புவி வெப்பமயமாகிறது; மண்ணும், உணவும் நஞ்சாக மாறியுள்ளன; விளைவு? விவசாயத்தில் கைநொடித்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் விவசாயமும், விவசாயிகளும் தவிக்கின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா நீர் பற்றாகுறை உள்ள பகுதி. அதனைக் காரணம் காட்டியும், விவசாயத் தொழிலை விட்டு வேறு பல தொழிலுக்கு விவசாயிகள் செல்வதன் விளைவாகவும் மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபடுவது மிகவும் குறைந்து விட்டது.
இந்த நிலையில், மணப்பாறை பகுதியில் சிறு முயற்சியாக குறைந்த நீரைக் கொண்டும், விவசாய வேலைக்கு குடும்ப நபர்களை மட்டுமே கொண்டும், விவசாயத் தொழிலில் ஈடுபட்டால் நல்ல வருமானம் பெறலாம் என்பதை உணர்த்தும் வகையில், கருவேல மரங்கள் நிறைந்த எனது 4 ஏக்கர் நிலத்தில் இயற்கை வழி விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்.

தொடக்கத்திலேயே இயற்கை வழி வேளாண்மை செய்ய முடிவெடுத்தோம். தமிழக அரசின் வேளாண் துறையில் (TNOCD) பயிற்சிகளும், ஆலோசனைகளையும் பெற்று இரண்டு நாட்டு மாடுகளை கொண்டு விவசாயத்தை தொடங்கினேன். முதலில் நீர் பற்றாக்குறையை தீர்க்க, தென்னை நார் கழிவுகளிலிருந்து கிடைக்க பெறும் Cocopeat மற்றும் தென்னை நார் துகள்களை கொண்டு தயாரிக்கப்படும் கம்போஸ்ட் இரண்டையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த ஆரம்பித்தேன்.
உர தயாரிப்புகளுக்காக மாடுகளில் இருந்து கிடைக்கக் கூடிய சாணம், கோமியம் போன்ற இயற்கைக் கழிவுகளைக் கொண்டு, மண்புழு உரம் மற்றும் இயற்கையான திரவ நிலை உரங்களான பஞ்சகவ்ய, மூலிகை பூச்சி விரட்டி, தேமோர் கரைசல், மீன் அமிலம் கரைசல், அமுத கரைசல் மற்றும் Waste Decomposer போன்ற உரங்கள் தயாரிக்கப்பட்டு நிலத்தில் பயன்படுத்தப்பட்டது. பண்ணையில் மஞ்சள் சாகுபடி, மூலிகை செடிகள் வளர்ப்பு மற்றும் மரப் பயிர்கள் வளர்ப்பது என முடிவு செய்யப்பட்டு விவசாயத் தொழிலை ஆரம்பித்தேன்.
இந்தப் பயிர்களுக்கு நிலத்தில் தென்னை நார் துகள்கள் பயன்படுத்தப்பட்டது. நீரை நன்கு உறிஞ்சி வைத்துக் கொள்வதுடன், மண்ணுள் காற்றோட்டத்தையும் இந்த துகள்கள் உருவாக்கும். ஆகையால் குறைந்த நீரை பயன்படுத்தினால் போதும்.
அதேபோல தென்னை நார் உரத்தை பயன்படுத்துவதன் மூலம், செடிகளின் ஆரம்ப கட்டத்திற்கு தேவையான உயிர் சத்துக்களான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் (NPK) சத்துக்களை கொடுத்து, செடிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தொடர்ந்து அந்த செடிகள், பயிர்களின் வளர்ச்சி காலத்தை பொறுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை இயற்கை உரங்கள் மற்றும் திரவ நிலை உரங்களை செலுத்தி வர பயிர்கள் மற்றும் செடிகள் நல்ல பலன் கொடுக்கும்.
மஞ்சள் சாகுபடி நிலப் பரப்பிலும், வேஸ்ட் பக்கெட் மற்றும் Grow Bags மூலமும் பயிரிடப்பட்டு, நன்கு வளர்ச்சியைக் கண்டது. அதிக அளவில் உற்பத்தியும் கிடைத்தது. அதேபோல மூலிகைப் பயிர்களும் நல்ல வளர்ச்சியை கொடுத்தது. மரப் பயிர்களான தேக்கு, வேம்பு, மா, நெல்லி, மூங்கில் போன்றவை குறைவான நீரை பெற்று நல்ல வளர்ச்சி பெற்றன. இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் முலம், நல்ல பலன் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை.
நமது தோட்டத்திலேயே மண்புழு உரங்கள், தென்னை நார் உரங்கள் மற்றும் திரவ நிலை உரங்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தி வருகிறோம். இந்த தோட்டமானது, 8 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கத்தால் வேளாண்மை சான்று பெற்று இயங்கி வருகிறது. மேலும், இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் கிழங்கு மற்றும் மஞ்சள் தூளுக்கு அரசு சார்பில் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மேற்படி இயற்கை வழி வேளாண்மையை உள்ளுர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச பயிற்சிகள் மூலமும் மற்றும் மத்திய அரசின் மானியத்துடன் கூடிய பயிற்சிகள் மூலமும் மண்புழு தயாரிப்பு, தென்னை நார் உரம் தயாரிப்பு, நர்சரி செடி வளர்ப்பு மற்றும் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வையும் வழங்கி வருகிறோம்.
மேலும், நமது பண்ணையில் ஜப்பானில் `மியாவாக்கி’ என சொல்லப்படும் அடர்நடர்வு விதைப்பு மூலம் மரங்கள், செடிகள் வளர்ப்பு, அதாவது அடர்நடர்வு குறுங்காடு முறையை பயன்படுத்தி மரங்கள், செடிகள் என கலந்து அடர் நடவு விதைப்பு செய்து குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்படி குறுங்காடுகள் அமைப்பின் மூலம், பல்லுயிர் பெருக்கம் ஏற்பட்டு பல வகையான நன்மை செய்யக்கூடிய பூச்சிகள், புழுக்கள், பறவைகள் மற்றும் ஊர்வனங்களின் இருப்பிடமாக மாறி உள்ளது.
மேற்படி நமது இயற்கை வேளான் பண்ணையில் உள்ள குறுங்காடுகள் அமைப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, தென்னை நார் உரம் மற்றும் திரவநிலை தயாரிப்புகளுக்கான அமைப்புகளை பார்வையிட மிகுந்த ஆர்வம் கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்வது இளைய தலைமுறையினருக்கு விவசாயம் மீதான ஆர்வத்தைப் பார்த்து, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

மேலும், இடுபொருட்கள் தயாரிப்புகள் அனைத்தும், நாமே உற்பத்தி செய்வதன் மூலம் உற்பத்திக்கான செலவுகள் குறைவதுடன் கூடுதலான பயிர் உற்பத்தியும் நல்ல வருமானமும், ஆரோக்கியமான சூழலும், ஆரோக்கிய உணவு கிடைப்பது மன நிம்மதியும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
இயற்கை வேளாண்மை: ஆதாயங்கள்
1. மண்ணுக்கு சிநேகிதம்
இயற்கை வேளாண்மை முறையில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் மண்ணின் இயற்கை நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. பசுந்தாள் உரம், கம்போஸ்ட், பஞ்சகவ்ய போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால், மண்ணின் உயிர்ச்சக்தி அதிகரிக்கிறது.
நீண்ட காலத்தில் மண் வளம் குறையாமல் நிலைத்திருக்கும். மண்ணின் நீர் பிடிப்புத் திறன் அதிகரிப்பதால், வறட்சி காலத்திலும் பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைகின்றன. இதன்மூலம் விவசாய நிலம் பல தலைமுறைகளுக்கும் பயன்படக்கூடியதாக இருக்கும்.
இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களில் ரசாயன எச்சங்கள் இல்லாததால் மனித உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. ரசாயனங்கள் கலந்த உணவுகள், பல நோய்களுக்கு காரணமாகும் நிலையில், இயற்கை உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது. இயற்கை உணவுகளில் சத்து நிறைவாக இருப்பதால், செரிமானம் மேம்படும். இதனால் மக்கள் ஆரோக்கியமாக வாழ முடிகிறது.
3. சுக மயமாகிறது சூழல்
இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு முக்கியமான வழியாகும். ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாததால் நீர், காற்று மற்றும் மண் மாசுபடுவதில்லை. விவசாய நிலங்களில் வாழும் பறவைகள், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
உயிரியல் சமநிலை காக்கப்படுகிறது, நிலத்தடி நீர் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகிறது. இதனால் இயற்கை சூழல் சீராக இருந்து, எதிர்கால தலைமுறைகளுக்கும் தூய சுற்றுச்சூழல் கிடைக்க உதவுகிறது.
4. விவசாயிக்கு லட்சுமி கடாட்சம்
இயற்கை வேளாண்மையில் வெளிநாட்டு ரசாயன உரங்கள் வாங்க வேண்டிய அவசியம் குறைகிறது. விவசாயிகள் தங்களே உரங்களை தயாரிக்க முடியும். இதனால் உற்பத்தி செலவு குறைகிறது.
இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கிறது. ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. நீண்ட காலத்தில் மண்வளம் பாதுகாக்கப்படுவதால், தொடர்ந்து நல்ல விளைச்சல் கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் நிலையாக உயரும்.
5. வளர்ச்சி வாழையடி வாழையாக
இயற்கை வேளாண்மை நிலைத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறது. இது இயற்கை வளங்களை வீணாக்காமல் பயன்படுத்தும் முறையாகும். மண், நீர், காற்று போன்ற வளங்கள் பாதுகாக்கப்படுவதால், எதிர்கால சந்ததிகளுக்கும் அவை கிடைக்கும். உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. கிராமப்புற வேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பாரம்பரிய விவசாய அறிவு மீண்டும் வளர்ச்சி பெறுகிறது. இதன் மூலம் சமூகம் முழுவதும் ஆரோக்கியமாகவும், தன்னிறைவு கொண்டதாகவும் மாறுகிறது.
நமது பண்ணையில் பயிற்சி பெறும் கிராமப்புற பெண்களுக்கு மத்திய அரசின் சான்று மற்றும் பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் 35%. மானியத்துடன் கூடிய வங்கி கடனுக்கான ஆலோசனைகள் வழங்கவும், அதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்யவும் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுய தொழில் செய்யும் வாய்ப்பினை பெறுகின்றனர்.
மேற்படி பண்ணையில் 200க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இயற்கை விவசாயம், நர்சரி வளர்ப்பு, உரங்கள் தயாரிப்பு, காய்கள் மற்றும் பழங்களில் இருந்த மதிப்புக் கூட்டுதல் பயிற்சி, தென்னை நார் சுழிவுகவிலிருந்து மதிப்புக் கூட்டுதல் பயிற்சி என பல்வேறு பயிற்சிகளின் மூலம் பயிற்சி பெற்ற பயனாளிகளில் சிலர் PMEGP-மத்திய அரசின் மானியத் திட்டத்தின் மூலம் கடன் உதவி பெற்று தொழில் தொடங்சி 25க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கி செயல்பட்டுத்தி வருகின்றனர்.
கட்டுரையாளர்: தி.கண்ணன்
சுதேசி ஜாகரண் மன்ச் (விழிப்புணர்வு இயக்கம்),
திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
