”அடுத்த தலைமுறையினரை மனதில் கொண்டு, அவர்களது வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தவும், தரத்தில் சமரசமின்றியும், புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது,” என, ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவரும், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான, கஸ்துாரி ரங்கன் தெரிவித்தார்.
பல மாற்றங்கள்
இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, சுலபமான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்பு திறன் சேர்க்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவரும், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான கஸ்துாரி ரங்கன், நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இளநிலை பட்டப்படிப்பை, எளிதானதாகவும், பல்வேறு பாடங்கள் கொண்டதாகவும், நான்கு ஆண்டுகள் கொண்ட படிப்பாகவும் மாற்றியுள்ளதன் வாயிலாக, மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். இது, 21ம் நுாற்றாண்டுக்கான திறமை வாய்ந்த இளைஞர்களை உருவாக்கும்.
பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, கல்வி கற்றலை சரியான பாதையில் செலுத்தவும், கல்வி நிறுவனங்களை வலுப்படுத்தவும், சமரசமற்ற கல்வி தரத்தை வழங்குவதுமே, இந்த புதிய கல்வி திட்டத்தின் நோக்கம்.
குழந்தையின் திறன்
ஆரம்ப கல்வியை பொறுத்தவரை, குழந்தைகளுக்கு, ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியில் கற்பிப்பது முக்கியமாகும். ஏனெனில், கருத்துகளை புரிந்துகொள்வது மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதில், தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியில் கல்வி கற்பதன் மூலம் மட்டுமே, குழந்தையின் திறன் சிறப்பாக வெளிப்படும்.
அதேநேரத்தில், குழந்தைகள் தங்கள் இளம் வயதில், ஏராளமான மொழிகளை கற்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர். இந்த நேரத்தில், மும்மொழிக் கொள்கையில், நெகிழ்வான அணுகுமுறையை கல்விக் கொள்கை பேசுகிறது.எனினும், இதுகுறித்து மாநில அரசுகள், சொந்தமாக முடிவெடுத்து, அதை அமல்படுத்தி கொள்ளலாம். கல்விக் கொள்கையில் எந்த ஒரு மொழியும் திணிக்கப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
பிரதமர் மோடி இன்று உரை
புதிய கல்விக் கொள்கை குறித்து, பிரதமர் மோடி, இன்று மாலை, 4:30 மணிக்கு, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையில், ‘கொரோனா’ பாதிப்பு, ‘ரபேல்’ போர் விமான வருகை உள்ளிட்டவை குறித்தும், அவர் குறிப்பிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மாணவர்கள் பங்கு பெறும், ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ இறுதிப் போட்டி, இன்று நடைபெறுகிறது. ‘ஆன்லைன்’ வாயிலாக நடைபெறும் இறுதிப் போட்டியில், 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாணவர்கள் மத்தியில், மோடி உரையாற்ற உள்ளார்.