சாதிக்க துடிக்கும் மாணவருக்கு ஜனாதிபதி தந்த பிரத்யேக பரிசு

வறுமையிலும், சிறந்த சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்ற இலக்குடன், சாதிக்கத் துடிக்கும் மாணவரை ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு சைக்கிளை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பரிசாக வழங்கியுள்ளார்.

டில்லியில் உள்ள அரசு பள்ளியில், ரியாஸ் என்ற சிறுவன், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், டில்லிக்கு அருகே உள்ள காசியாபாதில், வாடகை வீடு ஒன்றில் தங்கியுள்ளார். இவரின் பெற்றோர், பீஹாரில் வசித்து வருகின்றனர். பெற்றோருக்கு உதவும் வகையில், உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையை, ரியாஸ் செய்து வருகிறார்.

இப்படி பொறுப்புடன் உள்ள ரியாசுக்கு, சிறந்த சைக்கிள் பந்தய வீரராக வலம் வர வேண்டும் என்பதே கனவு. 2017ல் நடந்த டில்லி மாநில சைக்கிள் பந்தய போட்டியில், இவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அசாமில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், நான்காம் இடத்தை பிடித்து, அசத்திஉள்ளார்.

சொந்தமாக சைக்கிள் இல்லாததால், பிறரிடம் இருந்து, சைக்கிளை வாங்கிச் சென்று, பயிற்சிகளில் ரியாஸ் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தொடர்பான செய்திகள், ஜனாதிபதியின் பார்வைக்கு சென்றன.

இந்நிலையில், ரியாசை ஊக்குவிக்கும் விதமாக, அவருக்கு, புதிய பிரத்யேக சைக்கிளை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று பரிசாக வழங்கியுள்ளார். உலகத் தர சைக்கிள் பந்தய வீரராக வலம் வருவதற்கு, தன் வாழ்த்துகளையும், ஜனாதிபதி சிறுவனிடம் தெரிவித்தார்.