பிரதமரின் டுவிட்டர் பதிவுகள்

இயற்கையுடன் ஆழமான பிணைப்பு: பெங்களூரில் உள்ள பல்வேறு வகை மரங்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ள இயற்கை ஆர்வலரும், தோட்டக்கலை வல்லுநரும், கலைஞருமான சுபாஷினி சந்திரமணியின் ட்வீட்டர் பதிவுகளுக்கு பதிலளித்துள்ள பிரதமர், “இது பெங்களூரு மற்றும் அதன் மரங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல். பெங்களூரு மரங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட இயற்கையுடன் மிகவும் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது. மற்றவர்களும் தங்கள் நகரங்களின் இத்தகைய சிறப்புமிக்க அம்சங்களை  காட்சிப்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு சுவாரஸ்யமான வாசிப்பாக இருக்கும்’’ என கூறியுள்ளார்.

ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு பாராட்டு: இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாய் ஈட்டியதற்காக ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் நிறுவனத்திற்கும் (ஹெச்.ஏ.எல்) அதன் குழுவினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 2021ம் நிதியாண்டில் ரூ. 24,620 கோடியாக இருந்த வருவாய்,  கடந்த நிதியாண்டில் சுமார் ரூ. 26,500 கோடியாக (தற்காலிக மற்றும் தணிக்கை செய்யப்படாத) அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் 8 சதவீத வருவாய் வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது தொடர்பான ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர், ‘’அற்புதமான சாதனை! ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் முழு குழுவின் அருமையான ஆர்வத்தையும், செயல்பாட்டையும் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேளாக்களின் பிறப்பிடம் பாரதம்: மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “நம் நாட்டின் தனித்துவமான கலாச்சார அம்சங்களை எடுத்துரைக்கும் துடிப்பான மேளாக்களின் பிறப்பிடமாக பாரதம் திகழ்கிறது. அந்த வகையில் அற்புதமான கண்காட்சியாக விளங்கும் மாதவ்பூர் கண்காட்சி, குஜராத் மாநிலத்தையும், வடகிழக்கு பகுதிகளையும் இணைக்கிறது. மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தில் இது பற்றி நான் விரிவாகப் பேசியிருந்தேன். http://youtu.be/ZGZeyNlodoo” என கூறியுள்ளார்.

தூய்மையான பாரத சான்றிதழ்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகியவை ஓ.டி.எப்+ மாதிரி வகையை எட்டியதற்காக பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், ஒரே ஆண்டில் ஓ.டி.எப்+ கிராமங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். “அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ மக்கள் குறித்து பெருமையடைகிறேன். தூய்மையான பாரதத்தை உருவாக்க அம்மக்கள் தங்களைச் சிறப்பாக அர்ப்பணித்துள்ளனர்” எனப் பிரதமர் பாராட்டியுள்ளார்.

உத்கல் தின வாழ்த்து: உத்கல் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், “உத்கல் தின நல்வாழ்த்துக்கள். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒடிசா மாநிலமும், அதன் மக்களும் அளித்து வரும்  கலாச்சாரத்தின் வளமான பங்களிப்பை அங்கீகரிக்கும் தினமாகும். வருங்காலத்தில், ஒடிசா மக்கள் நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் பெற ஆசீர்வதிக்கப்படுவார்களாக” என வாழ்த்தியுள்ளார்.

துறைமுக செயல்திறன்: ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA), வரலாற்றில் முதன்முறையாக மார்ச் 30ம் தேதியன்று 6 மில்லியன் கன்டெய்னர்களை (டி.இ.யு 20 அடி கண்டெய்னர்கள்) கையாண்டு அதிக செயல்திறனைப் பதிவு செய்ததற்குப் பிரதமர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தின் டுவிட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், “பாரதத்தின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றின் குறிப்பிடத்தக்க சாதனை” எனப் பாராட்டியுள்ளார்.

சுவாமிகளுக்கு மரியாதை: டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவக்குமார சுவாமிகளின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர்  நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். டுவிட்டர் வாயிலாக அவர் கூறியிருப்பதாவது: “டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவக்குமார சுவாமிகளின் பிறந்தநாள் என்னும் சிறப்பு தருணத்தில் அவரை வணங்குகிறேன். லட்சக்கணக்கான மக்களிடையே அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். சமூகத்திற்கு சேவையாற்றுவதற்கும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவர் அதிக முன்னுரிமை வழங்கினார். அவரது கனவுகளை நிறைவேற்றும் வகையில் நாம் எப்பொழுதும் பணியாற்றுவோம்.”

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி உயர்வு: கடந்த நிதியாண்டில் பாரதத்தின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.15,920 கோடியை எட்டியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவிப்புக்கு பதிலளித்து ட்வீட் செய்துள்ள பிரதமர், “அற்புதம்! பாரதத்தின் திறமை மற்றும் ‘மேக் இன் இந்தியா’ மீதான ஆர்வத்தின் தெளிவான வெளிப்பாடு. கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் நல்ல பலன்களை அளித்து வருவதை இது காட்டுகிறது. பாரதத்தை பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சிகளுக்கு எங்கள் அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

போடோபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு அஞ்சலி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் டுவிட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், “போடோபா உபேந்திரநாத் பிரம்மாவின் வாழ்க்கை மக்கள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவரது பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம். மத்திய அரசும், அசாம் அரசும் அவரது கனவுகளை நனவாக்கவும், அற்புதமான போடோ மக்களுக்கு அதிகாரமளிக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.