பி.எப்.ஐ தடைக்கு எதிர்வினை

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) மாணவர் பிரிவான முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு (MSF) நிகழ்ச்சி ஒன்றில் அதன் தலைவர் பி.கே. குஞ்சாலிக்குட்டி உரையாற்றினார். அப்போது அவர், “மே 2, 2003ல் நடந்த மாராட் படுகொலையின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருந்தனர். தற்போது தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ அமைப்பின் தாய் அமைப்பான தேசிய ஜனநாயக முன்னணியின் (NDF) பயங்கரவாதிகள் தான் அதற்கு காரணம். பயங்கரவாதிகள் இருளில் ஒளிந்துகொண்டு, இரவில் படுகொலைகளை நடத்தினர். அது மராட் மக்களை அகதிகளாக்கியது. கோழைகள்தான் மதவெறியில் இறங்குகிறார்கள். அவர்கள் எதிரிகளை கொன்றுவிடுவோம் என்று அச்சுறுத்தும் முழக்கங்களை கூட குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்கள். ஆனால் ஐ.யு.எம்.எல் கட்சி அமைதிக்காக நிற்கிறது, அதனை நடைமுறைப்படுத்துகிறது.  நாதாபுரத்தில் கூட ஐ.யு.எம்.எல் பயங்கரவாத பாதையை பின்பற்றவில்லை. நாதாபுரத்தில் கொலையை கட்டவிழ்த்து விட்டவர்கள் பயங்கரவாதிகள் தான்” என கூறினார். இடதுசாரி சி.பி.எம் கட்சிக்கும் ஐ.யு.எம்.எல் கட்சிக்கும் எப்போதும் மோதல் இருக்கும் இடம் நாதாபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குஞ்சாலிக்குட்டியின் சமீபத்திய நிலைப்பாடு பி.எப்.ஐயிலிருந்து விலகுவது போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்கான முற்சியைத் தவிர வேறில்லை என்று சிந்தனையாளர்கள் நம்புகிறார்கள்.