பாரத வரலாற்றில் பட்டொளி வீசும் படேலின் சாதனை

சிதறுண்டு இருந்த பாரதத்தின் பல ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தவர் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்.

குஜராத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பில் சிறந்த மாணவர். வழக்கறிஞர் ஆகும் ஆசையால் ‘டிஸ்டிரிக்ட் பிளீடர்’ படிப்பை முடித்து கோத்ராவில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் லண்டன் சென்று  பாரிஸ்டர் படித்து பட்டம் பெற்றார். அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணி புரிந்தார்.

அப்போதே உள்ளூர் மக்களுக்காக பணியாற்றினார், மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தேச விடுதலைக்கு பாடுபட்டார். இதனால் போராட்டமும் சிறையும் அவர் வாழ்வில் அங்கமாகிப் போனது.

பாரதம் சுதந்திரமடைந்ததும் துணை பிரதமர், உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் படேல். அப்பதவியில் இருந்து அவர் ஆற்றிய பணிகள் சாதாரணமானது அல்ல.

அப்போது 565 ராஜ்ஜியங்களாக பாரதம் சிதறுண்டு கிடந்தது. அவற்றை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஒன்றிணைத்தார். அவரின் பாரதத்தின் மீதான பற்று, தீவிர முயற்சி, தொலைநோக்கு திட்டம், எஃகை போன்ற வலிமையான மனம். எடுத்ததை சாதிக்கும் உறுதி போன்றவையே அனைத்து ராஜ்ஜியங்களும் பாரதம் ஒரே குடையின் கீழ் வந்ததற்கு காரணம் என்றால் அது மிகையல்ல.

உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமை பெற்ற சர்தார் வல்லபாய் படேலின் ‘ஒற்றுமை சிலை’ நர்மதையாற்றின் கரையில் நிறுவப்பட்டுள்ளது. இதன் உயரம் 182 மீட்டர். இந்தச் சிலையை, சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த தினமான 2018 அக்டோபர் 31ல், பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் இன்று.