மே மாதம் இரண்டு வித்தியாசமான சின்னங்களை, நினைவூட்டும் விழாக்களை கண்டது — ஒன்று வரலாற்றுச் சின்னம், மற்றொன்று புராணச் சின்னம்: புத்தரும், தேவரிஷி நாரத முனியும். வழக்கமாக புத்த பௌர்ணமிக்குப் பிறகே நாரதர் ஜெயந்தி வருகிறது. புத்தர் என்ற துறவியுடன், பாரத மரபின் முதல் “செய்தியாளர்” எனக் கூறத் தகுந்த நாரத முனியும் இணைந்து நினைவுகூரப்படுவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.
நாரதர் உண்மையில் ஒரு “செய்தியாளர்” தான் — எங்கு வேண்டுமானாலும் செல்வார், எல்லோரையும் சந்திப்பார், அனைத்தையும் கவனிப்பார், தகவல்களைச் சேகரிப்பார். மூவுலகிலும் நடைபெறும் ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் அவர் இடம் பெறுவார். அவர் வருகை எந்தச் சந்திப்பிற்கும் ஒரு சிறப்பைச் சேர்க்கும்.
“நல்லது”, “கெட்டது” என்று வெறும் இரு எல்லைகளில் தகவலைப் பரப்புபவர்கள், நாரத முனியின் தனித்துவமான இடத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். ஆனால், இன்று நாம் அவரை ஒரு கலாச்சாரத் தூதராகப் புரிந்துகொள்ள முயல வேண்டும். ஏனெனில், நல்ல நோக்கத்துடன் தகவலைப் பரப்புவதின் முக்கியத்துவத்தை அவர் நமக்கு உணர்த்துகிறார்.
நாம் நாரதரை “கலகக்காரர்”, “இடையூறு செய்பவர்” என்று கேலி பேசிச் சிரிக்கலாம் ஆனால், அவர் தனிப்பட்ட வன்மம் கொண்டு செயல்படவில்லை; மாறாக, நிகழ்வுகளை முன்னேற்றுவதற்காகவே செயல்பட்டார். சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற அவர் நடுவுநிலை வகித்தார்; ஏற்பாட்டாளராகவும், ஊக்குவிப்பாளராகவும் இருந்தார்.
ஆனால் அவர் எப்போதும் வெற்றி பெறுகிறாரா? என்று பார்த்தால், சாவித்ரி –சத்யவான் கதையில் அவர் தோல்வியடைந்தவராகவே தோன்றுகிறார். சத்யவான் விரைவில் இறப்பார் என்று அவர் கூறியபோதும், சாவித்ரி தனது உறுதியால் இயற்கை விதிகளையே மாற்ற முயன்றாள். நவீன “இடதுசாரி – முற்போக்கு” பார்வைகளில் சிக்கிக்கொள்ளாமல் பார்த்தால், யம ராஜாவின் நன்மதிப்பைத் தனது பணிவு, அறிவு மூலம் சாவித்ரி பெற்றுக் கொள்வதை காணலாம். அவள் நல்ல நோக்கத்துடனும், தைரியத்துடனும் செயல்படும் பெண்ணின் உருவகமாக நிற்கிறாள்.
நாரத முனியின் மிகச் சிறந்த “பிரச்சாரப் பணி” விஷ்ணு பக்தியில் பிரகலாதனை ஆழ்த்தியது தான். பிரகலாதன் தாயின் கருவிலே இருந்தபோது, மகாவிஷ்ணுவின் அழகு, பெருமை, மகிமை பற்றிய கதைகளை நாரதர் கூறினார். கருவிலிருந்த குழந்தை அனைத்தையும் கேட்டது; பிறந்ததும் உறுதியான விஷ்ணு பக்தனாக வளர்ந்தார். தன் தந்தையான ஹிரண்ய கசிபுவின் அடக்குமுறையையும் எதிர்த்தார். இறுதியில் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரமாக வந்து அநியாயத்தை அழித்தார். பிரகலாதனின் அமைதியான எதிர்ப்பும் ஒத்துழையாமையும், பின்னர் பாரதத்தில் உருவான குடிமை மீறல் இயக்கங்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கலாம் என்பதும் சுவாரஸ்யம்.
16 ஆம் நூற்றாண்டில் மீராபாய் பற்றிய ஒரு புகழ்பெற்ற கதை உள்ளது. சித்தூரில் சிறையில் வைக்கப்பட்டிருந்த மீரா, துளசிதாசரிடம் கடிதம் அனுப்பி, “கிருஷ்ணரை வழிபட வேண்டாம்” என்று கூறிய மாமியார் வீட்டினரை எப்படிச் சமாளிப்பது என்று கேட்டாள். துளசியின் பதில் ஒரு பெண்ணுக்கான புரட்சிகரமான அறிவுரை — குடும்பத்தைவிட பக்தியையும் உண்மையையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதாக இருந்தது. மீரா பின்னர் வீட்டைவிட்டு வெளியேறி திரும்பவில்லை. இதனால், பாரத மனநிலையிலேயே குடிமை மீறலின் விதைகள் இருந்தன என்றும் கருதலாம்.
அதேபோல், காட்டில் அழுது கொண்டிருந்த சிறுவன் துருவனை நாரதர் சந்தித்து, “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரத்தை உபதேசித்தார். அதனால் துருவன் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்றார். அதற்கு முன்னரே, தேவஹூதியை கர்தம முனிவருடன் இணைத்தவரும் நாரதர். அவர்களுக்கு பிறந்த கபில முனிவர், மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். அவர் உலகிற்கு சாங்கிய தத்துவத்தை அளித்தார்; மனித வாழ்வை அறிவார்ந்த முறையில் புரிந்துகொள்ளும் வழியையும் காட்டினார்.
மேலும், இன்னொரு முக்கியப் பங்களிப்புக்காகவும் நாரதருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். “இன்னும் இந்த உலகில் முழுமையான தர்மமுள்ள மனிதன் யாராவது இருக்கிறாரா?” என்று வால்மீகி முனிவர் நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர், ஸ்ரீராமரை எடுத்துக்காட்டாகக் கூறினார். அந்த உரையாடலே வால்மீகியை இராமாயணத்தை இயற்றத் தூண்டியது. பின்னர் பிரம்மாவின் ஆணைப்படி, அவர் அதைப் பாடல்களாகப் பதிவு செய்தார். இவ்வாறு பாரத அடையாளத்தின் அடித்தளங்களில் ஒன்றான இராமாயணத்தின் பின்னணியிலும் நாரதர் இருந்தார்.
அதேபோல், ஸ்ரீமத் பாகவதத்தை இயற்ற வியாசருக்கு ஊக்கமளித்தவரும் நாரதர் தான். பாரத மரபின் “முதல் செய்தியாளர்” உண்மையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்; அவர் கொண்டாடப்பட வேண்டியவர்.
“கடவுள்களின் தூதர்” என்று வர்ணிக்கப்படும் நாரதர், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் செய்திகளையும், ரகசியங்களையும் எடுத்துரைக்கும் தனது திறமைக்காகப் புகழ்பெற்றவர். அவரே வரலாற்றின் முதல் பத்திரிகையாளர். ஆர்.எஸ்.எஸ் சார்பில் வருடந்தோறும் நாரதர் ஜெயந்தி அன்று ‘பத்திரிகையாளர் தினமாக’ கொண்டாடப்படுகிறது. அவர் சர்ச்சைகளைக் கிளப்புவதில் பெயர் பெற்றிருந்தாலும், அவரது நோக்கங்கள் ஒருபோதும் தீயவை அல்ல – அவரது செயல்கள் நீதியின் வெற்றியை உறுதிசெய்யும் ஒரு உயர்ந்த பிரபஞ்ச நோக்கத்திற்காகவே செயல்படுகின்றன.
தமிழில்: திவ்யா இரா.கு,
முனைவர் பட்ட ஆய்வாளர்