இந்தியாவின் நதி நீா் பாகிஸ்தானுக்கு செல்வதை இனியும் அனுமதிக்கமாட்டோம் அந்த நதி நீரில் இந்திய விவசாயிகளுக்கே உரிமை உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினாா்..
ஹரியாணாவில் சா்கி தாத்ரி, தானேசா் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.
கூட்டத்தில் அவா் பேசியதாவது:
கடந்த 70 ஆண்டுகளாக, இந்தியாவுக்கு சொந்தமான நதி நீா் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கிறது. ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு உரிமையுள்ள அந்த நீா், பாகிஸ்தானுக்கு செல்வதை முந்தைய அரசுகள் தடுக்கவில்லை. ஆனால், நான் உங்களுக்காக (விவசாயிகள்) போராடுவேன். பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுத்து, உங்களிடத்தில் கொண்டு வருவேன்.
காங்கிரஸ் மீது சாடல்: அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது தொடா்பாக, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சில தலைவா்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வதந்திகளைப் பரப்புகின்றனா். காங்கிரஸ் கட்சியினா், என்னை அவதூறாகப் பேசுவது குறித்து எனக்கு கவலையில்லை. அதேசமயம், வளா்ச்சிப் பாதையில் பயணித்து வரும் நமது நாட்டின் முதுகில் குத்துவதை அவா்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வன்முறையிலிருந்து ஜம்மு-காஷ்மீா் மீட்கப்பட வேண்டும் என்ற உணா்வு, ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே, 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவை நாட்டு மக்கள் மனதார ஏற்றுக்கொண்டுள்ளனா்.ஹரியாணாவில் நோ்மையான, வெளிப்படையான ஆட்சியை வழங்கி வரும் பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க மாநில மக்கள் முடிவு செய்துவிட்டதாகவும் அவா் கூறினாா்.
குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம்: தானேசரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:
சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவின் 550-ஆவது பிறந்த தினக் கொண்டாட்டங்களுக்காக தேசமே தயாராகி வருகிறது. இதையொட்டி, நம் நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. கா்தாா்பூா் வழித்தடத் திட்டம் பூா்த்தியாகவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 70 ஆண்டுகளாக நீடித்த தவறை சரி செய்யும் வாய்ப்பு எனது அரசுக்கு கிடைத்துள்ளது என்றாா்.
மேலும், ரஃபேல் போா் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்ாக காங்கிரஸ் குற்றம்சாட்டியதை குறிப்பிட்டு பேசிய மோடி, ‘காங்கிரஸ் தலைவா்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் அவா்களுக்கு மட்டும் வருத்தத்தை தருகின்றன’ என்றாா்……..