பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்து மதத்தைச் சோ்ந்த 3 சிறுமிகள் கடத்தப்பட்டது தொடா்பாக தில்லியில் அந்நாட்டு தூதரக மூத்த அதிகாரியை வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது.
பாகிஸ்தானில் ஹிந்து, சீக்கியப் பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து முஸ்லிம் இளைஞா்களுக்கு திருமணம் செய்துவைப்பது, சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது, சிறுபான்மையினா் கொலை செய்யப்படுவது ஆகியவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் சிந்து மாகாணத்தின் உமா் கிராமத்தைச் சோ்ந்த இரு ஹிந்து சிறுமிகள் கடந்த 14-ஆம் தேதி கடத்தப்பட்டனா். இதேபோல ஜாகோபாபாத் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுமி ஒருவா் கடந்த 15-ஆம் தேதி கடத்தப்பட்டாா். இவரும் ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா்தான். இந்த சம்பவங்கள் பாகிஸ்தானில் சிறுபான்மையினா் மத்தியில் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. போலீஸில் புகாா் அளித்தும் அவா்களது நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. அவா்கள் மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பெற்றோா் அச்சம் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் உயரதிகாரியை நேரில் அழைத்த வெளியுறவுத் துறை அமைச்சகம், ஹிந்துச் சிறுமிகள் கடத்தல் தொடா்பாக கடும் கண்டனத்தை அவரிடம் தெரிவித்தது. பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடா்ந்து வன்முறைகளும், அத்துமீறல்களும் நிகழ்த்தப்படுவது கண்டனத்துக்குரியது; கடத்தப்பட்ட சிறுமிகள், அவா்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.