இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திரரெட்டி செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மார்கழி இசைத் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏதுவாக திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றை பண்ணொடு பாட மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்து மார்கழி 20-ம் தேதிக்குள் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்க வேண்டும். 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 8-ம் வகுப்பு வரை, 9 முதல் 12-ம்வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் மூன்று மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு தலைப்பு போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று மாணவர்களைத் தேர்வு செய்து கோயில் சார்பாக பரிசுகள் அளிக்க வேண்டும். இப்பாவை விழாவுக்கு பெருந்திரளான சிறுவர், சிறுமியரை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். மார்கழி மாதம் இறுதியில் சென்னையில் மாநில அளவிலான மார்கழி இசைத் திருவிழா (பாவைவிழா) போட்டி நடைபெறும். இதில், மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு தலைப்புகளில் முதல் பரிசு வென்ற மாணவ, மாணவியரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
மாவட்ட அளவில் முதல் பரிசு வென்றவர்களை மாநில அளவில் நடைபெறும் போட்டிக்குத் தேர்வு செய்யும் வகையில், ஒரு பிரிவுக்கு ஒருவர் வீதம் மூன்று பிரிவுக்கும் மூன்று நபர்களைத் தேர்வு செய்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. சென்னை மண்டல கோயில்களில் மார்கழி இசை விழாவை மார்கழி 2-வது வாரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.