பலூசிஸ்தானும் மனித உரிமை மீறலும்

பாரத நாட்டின் 70வது சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்  மிக முக்கியமான இரண்டு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.  பலூசிஸ்தான் பற்றியதும் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்கின்ற உரிமை குரலும் அதே போல லடாக்கை ஒட்டியுள்ள பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஜில்கிட், பால்டிஸ்தான் பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமானவை என்பதை ஆணித்தரமாகவே  பாகிஸ்தானுக்கு உணர்த்த முற்பட்டிருக்கிறார்.  இதற்கு முன்னால் பாரத நாட்டின் எந்த பிரதமரும் இவ்வாறு துணிந்து வெளிப்படையாக தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டது கிடையாது. இவ்வாறு பேச வேண்டிய அவசியம் என்ன என்பதையும் உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குத் தொடர்ந்து பாகிஸ்தான் உதவினால், ஆக்கிரமிப்புக் காஷ்மீரை மீட்கவும் பலூசிஸ்தான் பிரிவினைவாதிகளை ஆதரிக்கவும் இந்தியா  இனி தயங்காது என்பதை தான் பிரதமர் மோடி தனது சுதந்திர உரையின் மூலமாக  மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பற்றி பேச பிரதமர் மோடிக்கு முழு உரிமை உண்டு, ஆனால் பலூசிஸ்தான் பற்றியும் ஜில்கிட் பற்றியும் பேச முடியாது என முன்னாள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வழக்கம் போல், இந்தியாவை தாக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்கள்.

பலூசிஸ்தான்

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு இருந்தே, பலூசிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுடன் சேர்வதை எதிர்த்து வந்தவர்கள்.  அரசியல் ரீதியாக பாகிஸ்தானில் உள்ள நான்கு பெரிய மாகாணங்களான பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், வடமேற்கு எல்லை மாகாணங்களில் வாழும் மக்கள் பாகிஸ்தானில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதில்லை. தனி சுய அதிகாரம் கொண்ட பகுதியாக இருந்து வருகிறது.  இந்நிலையில் தான் 1948லிருந்து இந்த பகுதிகள் பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 1948லிருந்து ஐந்து முறை மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.  இது பற்றி ஒரு ஆங்கில இதழ் வெளியிட்ட கருத்து, Since Balochistan was Forcefully occupied by Pakistan, Baloch people have been living as guests of death.    Baloch leaders are being deliberately assassinated by the occupying state of Pakistan for demanding  rights to their own land.

1948ம் வருடம் மார்ச் மாதம் 27ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் பலூசிஸ்தான் ஆட்சியாளரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, நிர்பந்தத்தின் பேரில் பாகிஸ்தானுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.  ( On 27 March  1948 Pakistan invaded Balochistan and coerced the Baloch ruler to sign a so&called accession trest after the Baloch Parliament had rejected the offer to join Pakistan on the basis of shared religion). ஆனால் பலூசிஸ்தான் நாடாளுமன்றம், மதரீதியான காரணங்களுக்காக பாகிஸ்தானுடன்  இணைந்த ஒப்பந்தத்தை நிராகரித்தது.   இதை தற்போது நினைவு படுத்தினால் காங்கிரஸ் கட்சியினருக்கு கோபம் வருகிறது.  எல்லைக் காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் காஃபார் கான் வடமேற்கு எல்லை மாகாணத்தைச் சார்ந்தவர், இந்தியாவுடன் இருக்கவே விரும்பினார். ஆனால் காஷ்மீர் விவகாரத்தின் காரணமாக பலூசிஸ்தான் இந்தியாவுடன் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை என்பதையும் தற்போது கவனிக்க வேண்டும்.

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் தாக்கப்பட்ட போது, ஹிந்துக்களுக்கு முழு பாதுகாப்பு அரணாக இருந்த பகுதி பலூசிஸ்தான். 1992ல் அயோத்தியில் பிரச்சினைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டபோது, பாகிஸ்தானில்  உள்ள பஞ்சாப், சிந்து பகுதிகளில் balush2 கள் இடிக்கப்பட்டன.  பலூசிஸ்தானில் உள்ள ஹிந்துக் கோயிலுக்கு, பலூசிஸ்தான் தலைவர்கள் காயிர்பக்ஸ் மாரி, அப்துல்லா கான் மெங்கல், நவாப் அக்பர்கான் புக்கி போன்றவர்கள் ஹிந்து ஆலயங்களுக்கு பாதுகாவலர்களாக விளங்கினார்கள்.  ஒரு ஹிந்துக் கோயில்கள் கூட தாக்கப்படவில்லை.

பலூசிஸ்தானில் 1948, 1958, 1962 ஆகிய வருடங்களில் விடுதலை பெற கிளர்ச்சியாளர்கள் மிகப்பெரிய அளவில்  போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.  1973 முதல் 1977 வரை நான்கு ஆண்டுகள் நடந்த கிளர்ச்சி மிகப் பெரிய அளவில் நடந்தது.  இந்த கிளர்ச்சியின்போது, பாகிஸ்தானின் ராணுவ தாக்குதல் காரணமாக, ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள், ஆட்சியளார்கள், தனிநாடு கோரும் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டார்கள்.  இந்த கலவரத்தில் பஞ்சாப் இன மக்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் தங்கள் பகுதியிலிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.  இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் பலூசிஸ்தானில் உள்ள கிளர்ச்சியாளர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்வதும் அவர்களை சிறையில் கொடுமைப்படுத்தி பின்னர் கொல்லுவதும் வாடிக்கையாகவே மாறிவிட்டது என ஐ.நா.சபையில் மனித உரிமை ஆணையம் தங்களது அறிக்கையில் தெரிவித்துளார்கள். 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் ராணுவம் பலூசிஸ்தானில் எடுத்த ராணுவ நடவடிக்கையில், இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும் நவாப் அக்பர்கான் புக்தியை கொன்ற போது, அவருக்கு ஆதரவாக இருந்த பலுசிஸ்தான் ஹிந்துக்களும் கொல்லப்பட்டார்கள்.

பலூசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகம் சீனாவின் ஆதரவில் கட்டப்பட்டு வருவது, இந்தியாவிற்கும் ஹிந்துக்களுக்கும் பாதகமானது.  இதன் காரணமாக பலூசிஸ்தானில்  வாழ்ந்துவரும் ஹிந்துக்கள் மீது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இந்தியாவின் ரா உளவாளிகள் என முத்திரை குத்துக்கிறது.  இவ்வளவு நெருக்கடியின் போதும், ஹிந்துக்கள் வெளியேறாமல் இருப்பதால், பலூசிஸ்தானின் தலைவர்கள் ஹிந்துக்களை காக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் பலூஸ்தானில் நடத்திய ஆய்வில்,  ஜிகாதி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளவர்களின் பட்டியலில் பலூசிஸ்தானியர் இடம் பெற்றுள்ளனர் என்று யாரேனும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல் கொய்தாவிற்காகவோ அல்லது தாலிபானுக்காகவோ பலுசிஸ்தானியர்கள் பரிவு காட்டியதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பலூசிஸ்தானைச் எங்காவது நடைபெற்ற பயங்கரவாதச் செயலில் தொடர்புடையவர்கள் என்ற செய்தி கூட வெளிவரவில்லை.  பயங்கரவாத அமைப்பில் தற்கொலை படை பிரிவில் கூட பலூசிஸ்தானியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.balush

1971ல் பங்களாதேஷ் விடுதலை பெற்றது போல் தாங்களும் வெற்றி பெறலாம் என சுதந்திர போராட்டத்தை நடத்திய போது, பாகிஸ்தான் அதிபர் ஜூல்பிகர் அலி  புட்டோ விமானப் படையைப் பயன்படுத்தி, பலூசிஸ்தானியர்களின் சுதந்திரப் போராட்டத்தை கடுமையாக நசுக்கினார்.  இந்நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பலூசிஸ்தான் பற்றி குறிப்பிட்டது, விடுதலை போரில் ஈடுபட்டுள்ள பலூசிஸ்தானியர்களுக்கு ஊக்கம் கொடுத்தது போல் ஆகிவிட்டது. இது ஒரு ராஜ தந்திரம் என்றால் மிகையாகாது.

ஜில்ஜிட்  – பால்டிஸ்டான்

இந்த பகுதி இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பகுதி.  இந்த பகுதி இந்தியாவுடன் நெருக்கமான பகுதி என்பதையும் கவனிக்க வேண்டும்.  1948-ல் சட்ட விரோதமாக பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி.  பால்டிஸ்தான் வாழும் மக்கள்  தங்களது இனத்தின் காரணமாகவும் மதம் மற்றும் கலாச்சாரத்தினாலும் ஜம்மு – காஷ்மீரில் உள்ள லடாக் இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.  குறிப்பாக ஜில்கிட் பகுதியில் உள்ள மக்கள் ஷியா மத  உறவின் காரணமாக லடாக் பகுதியில் உள்ள கார்கில் பகுதியில் வாழும் மக்களுடன் மதரீதியாக உறவினர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.  இறுதியாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அமைந்துள்ள இடம் இந்த பகுதி.  பாகிஸ்தானில் ஜியா உல் ஹக் ஆட்சியிலிருந்தே ஜில்கிட் பால்டிஸ்டான் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவான வாகாபிஸத்தை வளர்க்கத் துவங்கினார்.  ஆனாலும் இந்த பகுதி இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு முக்கியமான இடம்.  லடாக்கிலிருந்து காஷ்மீருக்குள் செல்லும் பாதையை மலையின் முகட்டிலிருந்து தடுக்கப்படக் கூடிய ஆபத்தும் இருக்கிறது .

பாகிஸ்தானின் நிலைப்பாடு

காஷ்மீர் மக்களின் உரிமைகள் நசுக்கப்படுவதாக அண்டை நாடுகளில் கூச்சல் போடும் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள், தங்களது சட்ட விரோத ஆக்கிரமிப்பால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மனித உரிமை மீறப்படுகிறது என்பதை பற்றி வாய் திறக்காமல் இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் மோடி.  பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அத்துமீறல்கள் எண்ணிக்கையில் அடங்காது.  தோட்டாக்களால் துளைத்த 231 பலூச் தேசிய வாதிகளின் சடலங்கள் 2011ல் பலூசிஸ்தான் சாலையில் கிடந்தன.  2012-ல் உலகில் நடந்த குறிப்பாக ஆசியாவில் நடந்த அதிக அளவு வன்முறைகள் நிகழ்ந்த பகுதி என்றால் அது பலூசிஸ்தான்.  குறிப்பாக 25 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது.

இந்தியப் பிரிவினையை பலூசிஸ்தானியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாகிஸ்தான் உருவானதை அவர்கள் வரவேற்கவேயில்லை.  வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் பலூசிஸ்தானையும் தனிநாடாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை 1947லிருந்தே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.  பலூசிஸ்தானியர்கள் காந்தியின் நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள்.

பலூசிஸ்தானியர்களின் சுதந்திர போராட்டத்தை அரசியல் காரணங்களுக்காக  காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை.  மன்மோகன் சிங் அரசு அக்கறை காட்டத் தொடங்கிய போது, சிலரின் நிர்பந்தத்தால், மன்மோகன் சிங் அரசு தனது நிலைப்பாட்டிலிருந்து பல்டி அடித்துவிட்டது.  மேலும்  எகிப்தில் உள்ள ஷரம் எல்ஷேக் நகரில் நடந்த அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது, பாகிஸ்தான் பிரமர் யூசூப் ரஜாகிலானியும் மன்மோகன் சிங் கூட்டாக வெளியிட்ட  அறிக்கையில் பலூசிஸ்தானில் நடக்கும் சுதந்திரப் போராட்டத்தை பயங்கரவாத இயக்கம் என வெளியிட்டு, பலூசிஸ்தான் மக்களின் நம்பிக்கையை தகர்த்தது.  ஆனால் இதற்கு மாற்றாக பிரதமர் மோடி சுதந்திர தின உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமில்லாமல், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கி வரும் என்பது திண்ணம்.