‘திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடித்துவிட்டு ஜெயிலுக்கு வரும் திருடன் அருணை திருத்த நீதிபதி முடிவு செய்தார். ஜெயிலரிடம் தனியாக பேசினார் நீதிபதி. அதன்படி ஜெயிலர், அருணுடன் பிக் பாக்கெட் அடிக்கும் பத்துப் பேரை ஒரே பிளாக்கில் வைத்தார். அருணைத் தனியாக அழைத்து, இங்கு உனக்கு தோட்ட வேலை, தினமும் ரூ. 200 கூலி. அதைக் கொண்டு கேண்டீனில் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும் என்றார். ஜெயிலர் மற்ற ஒன்பது பேரையும் தனியாக அழைத்து ’அருணின் கூலியை பிக் பாக்கெட் அடிப்பது உங்கள் வேலை. அவனுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் உங்களுக்கு உணவு இல்லை’ என்றார். முதல் நாளே அருண் பிக்பாக்கெட்டில் காசை விட்டான். அவனுக்கு இலவசமாய் சாப்பாடு கிடைக்கவில்லை. உயிர் வாழ கொஞ்சமாக உணவு கிடைத்தது. இது விடுதலையாகும் வரை தொடர்ந்தது. விடுதலையாகும் நாளில் நீதிபதி வந்தார். ‘சட்டத்தை, மாற்றும் அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை பரிட்சார்த்தமாக மாற்றினோம். எப்படி உணர்கிறீர்கள்?’ என்றார். ‘கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை, ஒரு செக்கண்டில் தட்டிக்கிட்டு போறது அக்கிரமம்‘னு புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க மாட்டேன் என்றான் அருண். ‘ அருணின் கஷ்டத்தை பார்க்க சகிக்கல்லை. இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.
‘தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.’ – திருக்குறள்