சந்தேஷ் பத்திரிகையின், மறைந்த மாணிக்சந்த் வாஜ்பாயிக்கு, பாஞ்சஜன்யா பத்திரிகையும் இந்திராகாந்தி தேசிய கலை மையமும் இணைந்து ஒரு நினைவஞ்சலியை நடத்தியது.
அதில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘ஒரு சிறிய விதையில் இருந்து பெரிய மரம் உருவாகும். ஆனால் அதற்கு அந்த விதை மண்ணில் புதைய வேண்டும். அதை போன்ற தியாகத்தை செய்தவர்களில் மாணிக்சந்தும் ஒருவர். அவர்களின் பெயர், தியாகம் எதுவும் வெளியே தெரிவதில்லை. அது மிக கடினமான பாதை. பதிலுக்கு எதாவது கிடைக்குமா என தெரியாது.
ஆனால் தேச நன்மைக்காக அதை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். சங்க ஸ்வயம்சேவகர்களும் இதுபோலவே தேசத்திற்கு சேவை புரிகின்றனர்’ என்றார். முன்னதாக அந்த விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘ஊடக சுதந்திரத்தை மத்திய அரசு மதிக்கிறது. அதில் தலையிட விரும்பவில்லை. சுயஒழுக்கத்துடன், செய்திகளை நடுநிலையுடன் தருவதையே விரும்புகிறது’ என்றார்.
பி.எம்.எஸ் நிறுவனர் தத்தோபந் தெங்கடியின் நூற்றாண்டு விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘கொரோனா பாதிப்புகளால் தற்போது உலகம் நம் பாரதிய வாழ்க்கை முறையை கடைபிடிக்க விரும்புகிறது.
ஆர்கானிக் உரத்தயாரிப்பு முன்பு மதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது அதற்கு ஈடில்லை என்பதை உலகம் ஒப்புக்கொள்கிறது.
பாரத பண்பாட்டில் விவசாயம் என்பது வியாபாரம் அல்ல, அது லக்ஷ்மி தேவியை வழிபடும் முறை. அது இன்று வியாபாரமாகி விட்டது. வியாபாரத்தில் பொருளாதாரம் மோசமானதல்ல. ஆனால் அது விவசாயிகளை சுரண்ட வழிவகுத்துவிடுகிறது.
நமக்கு 10000 ஆண்டு விவசாய அனுபவம் உள்ளது. எனவே மேற்கத்திய சுற்றுசூழலுக்கு எதிரானவற்றை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை’ என தெரிவித்தார்.