ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க
கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, குப்புசாமி ஜியைப் பற்றி
இந்த இதழில் அறிவோம்…
வீரராகவலு மற்றும் ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக, 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் பிறந்தார், குப்புசாமி ஜி. அவருக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பி மற்றும் ஒரு தங்கை. பள்ளிக் கல்வியை சேத்துப்பட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் தொடங்கி, அங்கு ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். அதன்பிறகு, சென்னை எழும்பூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்துத் தேர்ச்சிப் பெற்றார்.
பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர், குப்புசாமி ஜி. பள்ளியில் நடைபெறும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். நல்ல கால்பந்து வீரராகவும் திகழ்ந்துள்ளார். பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சாரணர் (ஸ்கவுட்) இயக்கத்தில் இருந்ததால், பல ஊர்களில் நடக்கும் சாரணர் முகாம்களில் பங்கேற்றுள்ளார்.
எமர்ஜென்சியின் கொடூர துன்புறுத்தலுக்குப் பிறகு, பிரபல பத்திரிகையாளர் சோ ராமசாமி நடத்திய துக்ளக் பத்திரிக்கையில், சங்க பிரச்சாரக் சூரிஜி என அன்புடன் அழைக்கப்படும் சூரியநாராயணராவ் ஜியின் பேட்டி, துக்ளக் பத்திரிகையில் இடம் பெற்றது. அதனைப் படித்து ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மேல் நல்ல அபிமானம் கொண்டு, சங்கத்தில் சேர விரும்பி சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் சங்க அலுவலகத்திற்கு வந்தார் குப்புசாமி ஜி.
அங்கு வந்து விசாரித்ததில், அப்போதைய சங்க அலுவலகத்தின் பொறுப்பாளராக இருந்த சுகுமார்ஜியை சந்தித்து, தான் சங்கத்தில் சேர விரும்பும் எண்ணத்தை பகிர்ந்தார். அப்போது சென்னை எழும்பூரில் காலையில் பிரபாத் ஷாகா நடைபெறும், அதில் கலந்து கொள்ள வருமாறு சுகுமார்ஜி அழைத்தார்.
தனது சைக்கிளில் அதிகாலையிலேயே ஷாகா சென்ற குப்புசாமிஜிக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகள் தினசரி வழங்கப்பட்டதால், தினமும் ஷாகாவிற்கு ஆர்வத்துடன் செல்வார். ஷாகாவிற்கு அண்ணாமலை ஜி, ராதாகிருஷ்ணன் ஜி போன்ற பலரும் தினமும் வருவார்கள். திருமணத்திற்கு பிறகு சங்க அறிமுகம் ஏற்பட்டு, ஷாகாவிற்கு சென்றது, என் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டது என நம்மிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார், குப்புசாமி ஜி.
தனது தந்தையை இழந்ததால் தாய், உடன்பிறந்த இரண்டு தம்பி மற்றும் தங்கையை குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குப்புசாமிஜிக்கு இருந்தது. அதனால் தனது 19 வயதிலேயே, படிப்பை நிறுத்தி விட்டு, 1967 ஆம் ஆண்டு மே மாதம் ரயில்வே வேலைக்கு சென்று, குடும்பத்தை கவனித்துக் கொண்டார், அதனுடன் சங்கப் பணியையும் தொடர்ந்து செய்து வந்தார்.
1969 ஆம் ஆண்டு, ரயில்வே வேலையை விட்டு, பிரபல ஏ.சி. நிறுவனமான ப்ளூஸ்டார் நிறுவனத்தில் சேர்ந்தார். தம்பி, தங்கை திருமணத்திற்காக நிறைய பணத்தேவை இருந்தது. அதற்காக அதிகம் நேரம் வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய நிலையிலும், குப்புசாமிஜி சங்கப்பணிக்கு நேரம் கொடுக்க தவறியதில்லை என அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
ஒருமுறை பைட்டக்கிற்காக பெங்களூர் சென்றபோது, சூரிஜி அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் குப்புசாமிஜி மற்றும் தமிழகத்தில் இருந்து சென்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அது தனக்கு கிடைத்த வாழ்நாள் பாக்கியம் என நம்மிடம் தெரிவித்தார். சூரி ஜி, இராம கோபாலன் ஜி, சிவராம் ஜி, கோவிந்தன் ஜி, சுகுமார் ஜி, சண்முகநாதன் ஜி, தனுசு ஜி, காசி ஜி என பல அதிகாரிகள் ஜியின் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். குப்புசாமி ஜி வீட்டில் பலமுறை சங்க பைட்டக் நடந்துள்ளது.
பல பொறுப்புகள் வகித்த குப்புசாமி ஜி, சென்னை மஹாநகர் சேவா பொறுப்பில் இருந்தபோது, பலரையும் சங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார். காலையில் எழுந்து ஆறு முப்பது மணிக்கு ஷாகா சென்று, பிறகு சங்க ஸ்வயம்சேவகர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை சந்தித்து, அதன்பிறகு வேலைக்கு சென்று, மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து குளித்து, திரும்பவும் இரவு நேரங்களில் ஷாகா செல்வது, சம்பர்க செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார். சென்னையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று, சங்க வேலையை விரிவாக்கம் செய்வதில் பெரும்பங்கு வகித்தார் என்றால், அது மிகையல்ல.
சங்கத்தில், 1979ல் பிராத்தமிக் முகாமை மதுரையில் முடித்த குப்புசாமி ஜி, 1981ல் முதலாம் ஆண்டு சங்கப்பயிற்சி முகாமை திருச்சியிலும், 1984ல் இரண்டாம் ஆண்டு சங்கப்பயிற்சி முகாமை கேரளாவின் பாலக்காடிலும், மூன்றாமாண்டு சங்கப்பயிற்சி முகாமை 1987ல், நாக்பூரிலும் முடித்துள்ளார். பல முகாம்களில் பிரபந்தக்காக இருந்துள்ளார். அப்போது கிடைத்த அனுபவம், தனது வாழ்க்கையின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகித்தது என, நம்மிடம் தெரிவித்தார் குப்புசாமி ஜி.
1976 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 8ம் நாள் குணசுந்தரி அம்மாளை திருமணம் செய்த குப்புசாமிஜிக்கு, தினேஷ் என்ற மகனும், ஹேமலதா மற்றும் பிரியா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். தினேஷ்ஜி தற்போது அசோக் லைலாண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இரண்டு மகள்களும் திருமணம் முடிந்து நல்ல நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
தற்போது வயது முதிர்ந்து நிலையிலும், வாரம் தோறும் சாங்கிக் வருகிறார். சில நேரங்களில் ஷாகாவிற்கு வருவார். அனைத்து சங்க நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தனக்கு கிடைத்த அனுபவங்களை இளைய தலைமுறை காரியகர்த்தர்களுக்கு தெரிவித்து, அவர்கள் உற்சாகமாக சங்க வேலை செய்ய ஊக்கமளித்து வருகின்றார்.
தனது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, சங்கப்பணிக்கும் அதிக நேரம் கொடுத்த குப்புசாமி ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.