ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள்
தேச மறுமலர்ச்சிப் பணியில் பல்வேறு துறைகளில் அமைப்பின் தொண்டர்கள் செய்த சேவை, குறித்து விவரிக்கும் நூலே ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும் பணிகள்.
1984ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் நூற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்டது இந்நூல். மேலும் பல புதிய தகவல்களோடு புதுப்பொலிவுடன் தற்போது 2017ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் மூன்றாவது தலைவர் பாளாசாகேப் தேவரஸ் அவர்களின் நூற்றாண்டு விழா நேரத்தில் மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் 55,000த்திற்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது தொண்டர்களுக்கு தேசத் தொண்டே முதல் கடமை என வழிகாட்டுகிறது. அதன் பயனாக விளைந்த நன்மைகளை நூல் பல்வேறு உதாரணங்களோடு தெளிவாக எடுத்து இயம்புகிறது. சுதந்திரப் போராட்ட காலத்திலும் சீன, பாகிஸ்தான் போர்களின்போதும் பூகம்பம், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் காலத்திலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசத்திற்கு ஆற்றிய அரும்பணிகளை எளிமையாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
தீண்டாமைக்கு எதிரான சமதர்மத்தை வெளிப்படுத்தும் சேவையாகட்டும், வனவாசி மக்களிடையே அவர்களுக்காக செயல்படும் அமைப்பாகட்டும், தொழிலாளர், அரசியல் எனப் பல்வேறு துறைகளில் ஆர்.எஸ்.எஸ். செய்துவரும் பல்வேறு தொண்டுப் பணிகளை இந்நூலில் காணலாம். ஆர்.எஸ்.எஸ். தேசத்திற்கு என்ன செய்துவிட்டது என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் விரிவான விளக்கம் தருகிறது. நல்லெண்ணத்தை மனதில் பதிக்கச் செய்யும்.
***
ஞானகங்கை
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) இரண்டாவது தலைவர் ஸ்ரீகுருஜி கோல்வல்கரின் சிந்தனைக் களஞ்சியமே ஞானகங்கை. இது அவரின் வாழ்நாள் முழுவதுமான சொற்பொழிவுகள், கலந்துரையாடல், கேள்வி-பதில், கட்டுரைகளின் தொகுப்பு. 1964ம் ஆண்டு தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் 25வது ஆண்டு கொண்டாடப்பட்ட வேளையில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. இதில் தேசபக்தி, மொழி, தீண்டாமை, சிறுபான்மையினர், கடந்தகால வரலாறு, தற்போதைய அரசியல், விசுவாசம், என பல தலைப்புகளில் அவர் கொடுத்துள்ள விளக்கம் தற்போதைய சூழலுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது.
லட்சியப் பாதையில் தொடர்ந்து வரும் தொண்டர்களுக்கு கலங்கரை விளக்கம்; ஆர்.எஸ்.எஸ். என்ன நினைக்கிறது, அதன் செயல்பாடுகள் என்ன என்று தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு ஞானகங்கை வழிகாட்டும்.
ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள்: விலை : ரூ. 250 பக்கங்கள் : 520
ஸ்ரீகுருஜியின் ஞானகங்கை:
விலை ரூ.400/- பக்கங்கள் : 624
இரண்டு புத்தகங்களும் கிடைக்குமிடம் விஜயபாரதம் பதிப்பகம்.
போன்: 044- 2642 0870