சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும், ராம்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான ஆஸம் கானுக்கு எதிராக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நில அபகரிப்பில் ஈடுபட்டதாக, உத்தரப் பிரதேச காவல் துறையில் ஆஸம் கானுக்கு எதிராக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆஸம் கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பலரிடம் இருந்து நிலங்களை மிரட்டி அபகரிப்பு செய்ததாக, ஆஸம் கான் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. விசாரணையின்போது, இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், ஆஸம் கான் அபகரித்ததாகக் கூறப்படும் அனைத்து சொத்துகளும் கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்படும்.
மேலும், அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என்றார் அவர். ராம்பூரில் முகமது அலி ஜெளஹார் பல்கலைக்கழகத்தை நிறுவி ஆஸம் கான் நடத்தி வருகிறார். அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் அவர் உள்ளார். அந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடத்தைக்கூட நில உரிமையாளரிடம் இருந்து ஆஸம் கான் மிரட்டி வாங்கியதாக, அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, ஆஸம் கானின் நற்பெயருக்கும், அவரது பல்கலைக்கழகத்தின் மீதான நன்மதிப்புக்கும் களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் ராம்பூர் மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார் என்று சமாஜவாதி குற்றம்சாட்டியுள்ளது. அண்மையில், உத்தரப் பிரதேச அரசின் வலைதளத்தில், நில அபகரிப்பாளர்கள் பட்டியலில் ஆஸம் கானின் பெயரை மாவட்ட நிர்வாகம் சேர்த்தது குறிப்பிடத்தக்ககது.